“120 ரூபாயில் மாட மாளிகைகள் கட்டப்போவதில்லை” - எம்.எஸ்.பாஸ்கர் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: “ஒரு படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருங்கள். எல்லோரும் பார்க்கட்டும். இந்த படங்களை பார்க்க செலவளிக்கும் 120, 200 ரூபாயில் மாட மாளிகைகள், கோபுரங்கள் கட்டிவிடப்போவதில்லை” என நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விதார்த் நடித்துள்ள ‘லாந்தர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “பொதுமக்களுக்கு நான் சொல்வது ஒன்று தான். படம் உங்களுக்குப் பிடிக்குதா நாலுபேரிடம் சொல்லுங்கள். பிடிக்கவில்லை என்றால் உங்களுடனே அதை வைத்துகொள்ளுங்கள். படம் பார்க்க செல்பவர்களிடம், ‘அந்தப் படம் நல்லா இல்லை பார்க்க போகாதீர்கள்’ என்று சொல்லாதீர்கள்.

ஏனென்றால், ஒரு படம் எடுப்பதற்கு எத்தனை பேரில் உழைப்பு இருக்கிறது, பலர் கஷ்டப்படுகிறார்கள். எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். எத்தனையோ பேர் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அதுபோல பல கஷ்டங்கள் உண்டு.

அதுபோல கஷ்டப்பட்டு எடுக்கும் படங்களை செல்ஃபோன் கையில் இருக்கும் ஒரே காரணத்தினால், திரையரங்கில் அமர்ந்து கொண்டு படம் மொக்க என பதிவிடுகிறார்கள். ‘இந்தப் படத்துக்கு தயவு செய்து வந்துவிடாதீர்கள்’ என்று சொல்லாதீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருங்கள். எல்லோரும் பார்க்கட்டும்.

இந்தப் படங்களை பார்க்க செலவளிக்கும் 120, 200 ரூபாயில் மாட மாளிகைகள், கோபுரங்கள் கட்டிவிடப்போவதில்லை. ஆனால், நல்லா இருக்கும் படத்துக்கும் சரி, நல்லா இல்லாத படத்துக்கும் சரி நிறைய பேர் வந்து பார்த்து வாய்ப்பளித்தால், பல குடும்பங்கள் வாழும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சிறிய படங்களில் ஏன் நடிக்கிறீர்கள் என கேட்கிறார்கள். பெரிய நடிகர்கள் படங்களில் அழைத்தால் நடிக்கிறேன். ஆனால், ‘சிங்கத்து வாலாக இருப்பதை விட, ஈக்கு தலையாக இருப்பதை’ தான் நான் விரும்புகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE