இளைஞர் கொலையில் கன்னட நடிகர் தர்ஷன் கைதானது எப்படி? - முழு பின்னணி

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்களூருவை அடுத்துள்ள காமாட்சிபாளையா சாலையோரத்தில் கடந்த 9-ம் தேதி காலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கிடந்தது. அதனை தெருநாய்கள் குதறுவதை கண்ட அடுக்குமாடி காவலர்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தினர்.

அப்போது காமாட்சி பாளையாவில் உள்ள வினய் கவுடா (37) என்பவரின் வீட்டில் இருந்து கார் மூலம் கொண்டுவந்து, சடலத்தை சாலையில் வீசியது சிசிடிவி மூலம் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வினயை கைது செய்து, விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பி.தயானந்தா கூறியதாவது: கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெயர் ரேணுகா சுவாமி (33). கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்தஇவர் அங்குள்ள மருந்தகத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி ஓராண்டு கடந்துள்ளது. பஜ்ரங் தளம் அமைப்பை சேர்ந்த ரேணுகாசுவாமி கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர் மன்றத்திலும் உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி கன்னட நடிகை பவித்ரா கவுடா தனதுஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தள பக்கங்களில் தர்ஷனுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்தார்.

அதற்கு ரேணுகா சுவாமி, ‘‘இந்த‌ படத்தை உடனடியாக நீக்குங்கள். நீங்கள் தர்ஷனுடன் உறவில் இருப்பதாலேயே, அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. நீங்கள் அவரை விட்டுபிரிந்து செல்லுங்கள்'' என்று கருத்துபதிவு செய்தார். மேலும் அவருக்குதனிப்பட்ட முறையிலும் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக தெரிகிறது.

இந்நிலையில் நடிகர் தர்ஷன் ரசிகர் மன்ற தலைவர் பவன் குமார் (40) ரேணுகா சுவாமியை தொடர்புகொண்டு, அந்த பதிவுகளை நீக்குமாறு எச்சரித்துள்ளார். அதனை ரேணுகா சுவாமி ஏற்கவில்லை. இதனால் கோபமடைந்த பவன்குமார், சில நண்பர்களுடன் சித்ரதுர்காவுக்கு சென்று ரேணுகா சுவாமியைபெங்களூருவுக்கு கடத்தி வந்துள்ளார்.

பின்னர் நடிகர் தர்ஷனின் நண்பரான வினய் கவுடாவின் வீட்டுக்கு கொண்டு சென்று கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். இந்த கொலையில் தர்ஷனின் நண்பர் வினய் கவுடா, ரசிகர் மன்ற தலைவர் பவன் குமார், தர்ஷனின் பவுன்ஸர்கள் அர்ஜுன், முருகேஷ், லிக்கித், ராகேஷ் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

கைதான நபர்களிடம் விசாரணை நடத்திய போது, ‘‘ரேணுகா சுவாமிக்கு நன்றாக பாடம் புகட்டுமாறு தர்ஷன் கூறியதாக தெரிவித்த‌னர். அதனாலேயே அவரை கடத்திவந்து, தாக்கினோம்’’ என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் ரேணுகா சுவாமியை கொலை செய்வதற்கு முன்பாக தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடாவிடம் மன்னிப்பு கேட்க வைத்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இவ்வழக்கில் தர்ஷனுக்கும், பவித்ரா கவுடாவுக்கும் நேரடியாக தொடர்பு இருப்பது பல ஆதாரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இதையடுத்து போலீஸார் நேற்று காலை தர்ஷன், பவித்ரா கவுடா, பவன்குமார், வினய் கவுடா, அர்ஜுன், முருகேஷ், ராகேஷ் உள்ளிட்ட 15 பேரை கைது செய்துள்ளனர். இவ்வாறு பி.தயானந்தா தெரிவித்தார்.

தர்ஷன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ரசிகர்கள் அன்னபூர்ணேஸ்வரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தர்ஷனை தொடரும் சர்ச்சை: கன்னட நடிகர் தர்ஷன், ஆரம்பம் முதலே சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். அவருடன் நடிக்கும் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட அவர், 2003-ல் தன் ரசிகை விஜயலட்சுமியை திடீரென திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரை தாக்கி கொடுமைப்படுத்தியதால் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இருவருக்கும் விவாகரத்து வழக்கு நடந்த நிலையில், அப்போது மூத்த நடிகர் அம்பரீஷ் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தார்.

இருவரும் தனித்தனியாக வசித்துவரும் நிலையில், தர்ஷன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2016-ல் விஜயலட்சுமி புகார் அளித்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே 2022-ல் மைசூரு நட்சத்திர விடுதி ஊழியரை தாக்கியதாகவும் அவர் மீது புகார் எழுந்தது. 2023-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று தனது பண்ணை வீட்டில் நள்ளிரவு 2 மணி வரை கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 1-ம் தேதி நடிகை பவித்ரா கவுடா தன் சமூக வலைதள பக்கத்தில், ''தர்ஷனுடனான எனது உறவு 10 ஆண்டுகளை கடந்துள்ளது'' என பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE