“ஒன்றரை ஆண்டுகளாக சர்க்கரையை தொடவில்லை” - கார்த்திக் ஆர்யன் பகிர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: “ஒன்றரை வருடங்கள் சர்க்கரையை முற்றிலும் தவிர்த்துவிட்டேன். முதலில் இது கடினமாக இருந்தாலும், படிப்படியாக இந்த வாழ்க்கை முறை மாற்றத்தில் மகிழ்ச்சியைக் கண்டேன்” என ‘சந்து சாம்பியன்’ படத்துக்காக தன் வாழ்க்கை முறையை மாற்றியமைத்தது குறித்து நடிகர் கார்த்திக் ஆர்யன் பகிர்ந்துள்ளார்.

‘பஜ்ரங்கி பைஜான்’, ‘83’ படங்களின் மூலம் பாலிவுட்டில் அழுத்தமான தடம் பதித்த இயக்குநர் கபீர் கான். இவரது இயக்கத்தில் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘சந்து சாம்பியன்’ (Chandu Champion). ஸ்போர்ட்ஸ் ட்ராமாவான இப்படம், பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற முரளிகாந்த் பெட்கர் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியுள்ளது. இதில் கார்த்திக் ஆர்யன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக அவர் 18 கிலோ எடையை குறைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறுகையில், “பொதுவாக இனிப்புகள் மீது அதிக விருப்பம் கொண்டவன் நான். உணவுக்குப் பின் இனிப்பு சாப்பிடுவதை ஒரு சடங்கு போல பின்பற்றி வந்தேன். ஆனால், உடல் எடையை குறைக்க அதனை நிறுத்துவது மிகவும் சவாலாக இருந்தது. முழுமையாக சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்த முடிவு எடுக்கும்போது அது எனக்கு எதிரியாகிவிட்டதை உணர்ந்தேன்.

சர்க்கரையை உட்கொள்வது எனது ஆரோக்கியத்துக்கும், நல்வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை உணரத்தொடங்கினேன். படத்துக்காக மட்டுமல்லாமல், சர்க்கரை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு என்பதை தனிப்பட்ட முறையில் நம்பினேன். காலப்போக்கில், என் மனநிலை மாறியது. மேலும் நான் ஒன்றரை வருடங்கள் சர்க்கரையை முற்றிலும் தவிர்த்துவிட்டேன்.

படப்பிடிப்பு முடிந்த நாளன்று இயக்குநர் கபீர்கான் எனக்கு ரஸமலாய் ஊட்டினார். ஒன்றரை வருடங்களுக்குப் பின் அதை சாப்பிடதால் அதன் சுவை எனக்கு பிடிக்கவில்லை. இரவில் சூப் மட்டும் சாப்பிடுவேன். மதியம் கவுலி அரிசியை எடுத்துக்கொள்வேன். சாலடுகள், பீன்ஸ், பருப்பு மற்றும் பனீர் நிறைந்த உணவை ஏற்றுக்கொண்டேன். சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தியது எனது எடை குறைப்புக்கு மட்டும் கைகொடுக்கவில்லை. மாறாக நல்ல தூக்கத்தையும் கொடுத்தது. முதலில் இது கடினமாக இருந்தாலும், படிப்படியாக இந்த வாழ்க்கை முறை மாற்றத்தில் மகிழ்ச்சியைக் கண்டேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE