‘ஈகோவால் என்னை அடிமைபோல நடத்தினார்” -  மலையாள இயக்குநர் மீது ஆடை வடிவமைப்பாளர் புகார்

By செய்திப்பிரிவு

கொச்சி: ‘வேட்டையன்’ உள்ளிட்ட படங்களின் ஆடைவடிவமைப்பாளர் லிஜி பிரேமன், மலையாள இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் மீது புகார் தெரிவித்துள்ளார். தன்னை உளவியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அடிமை போல் நடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘சுரேஷின்டேயும் சுமலதாயுதேயும் ஹ்ருதயஹரியாய ப்ரணயகதா’ (Sureshanteyum Sumalathayudeyum Hrudayahariyaya Pranayakadha) என்ற படத்தில் வேலை செய்தேன். மோகன்லாலின் ‘பரோஸ்’ மற்றும் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படங்களில் என்னுடைய வேலையைப் பார்த்த பின் படக்குழு என்னை இப்படத்தில் பணியாற்ற அழைத்தார்கள். மொத்தம் 110 நாட்கள் இப்படத்துக்காக வேலைபார்த்துள்ளேன்.

படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளின்போது இயக்குநரால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவர் என்னை ஒரு அடிமைபோல நடத்தினார். அவருக்கு இருக்கும் ஈகோவால் என் மீது அடிக்கடி வெறுப்புக்காட்டி நடந்துகொண்டார். மன உளைச்சலால் நான் படத்திலிருந்து விலகினேன். இருந்தாலும் 75 சதவீத வேலைகளை செய்து கொடுத்துவிட்டு தான் வந்தேன்.

ஆனால், படத்தில் ஆடை வடிவமைப்பாளர் என்ற இடத்தில் மற்றொருவரின் பெயரும், உதவியாளர் என பெயரிடப்பட்டு என் பெயரையும் போட்டு என்னை அவமானப்படுத்தியிருந்தார்கள். எனக்கு பேசிய ஊதியத்தையும் படக்குழு முழுமையாக வழங்கவில்லை. படம் வெளியானபோது தேவையில்லாமல் சர்ச்சைகளை கிளப்ப வேண்டாம் என அமைதியாக இருந்துவிட்டேன்.

ஆனால், இப்போது படம் ஓடிடியில் வெளியாகும்போதாவது எனக்கான உரிய க்ரேடிட்டை கொடுக்க வேண்டும். அதேபோல படம் விருதுகளுக்கு அனுப்பப்படும்போது அதில் என் பெயர் இடம்பெற வேண்டும். இது தொடர்பாக எர்ணாக்குளம் நீதிமன்றத்தை நாடி உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணனை பொறுத்தவரை அவர் இயக்கத்தில் வெளியான ‘ன்னா தான் கேஸ் கொடு’ மலையாளப்படும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய சுரேஷின்டேயும் சுமலதாயுதேயும் ஹ்ருதயஹரியாய ப்ரணயகதா’ கடந்த மே 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE