கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!

By செய்திப்பிரிவு

மும்பை: சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனாவை அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு வேலை தருவதாக பாலிவுட் பாடகர் விஷால் தத்லானி உறுதியளித்துள்ளார்.

சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் அறைந்ததாக வெளியான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான நிலையத்தில் பணியிலிருந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகளுக்கு எதிராக கங்கனா தெரிவித்த கருத்துகளே காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து கங்கனாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிஐஎஸ்எஃப் பெண் காவலர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பஞ்சாப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு இசையமைப்பாளரும் பாடகருமான விஷால் தத்லானி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரி பகுதியில், “நான் வன்முறையை ஆதரிப்பது இல்லை. ஆனால் நிச்சயமாக அந்த காவலரின் தனிப்பட்ட கோபத்தின் தேவையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவருக்காக வேலை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் உறுதியளிக்கிறேன்.ஜெய்ஹிந்த். ஜெய்ஜவான். ஜெய் கிசான்” என்று விஷால் தத்லானி தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஷால் தத்லானி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE