தமிழில் 5 மாதத்தில் 110 படங்கள் ரிலீஸ்: கடந்த ஆண்டை விட அதிகம்

By செய்திப்பிரிவு

இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் 110 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த வருடத்தை விட அதிகம்.

தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஒவ்வொரு வாரமும் நான் கைந்து திரைப்படங்கள் வெளியாகி வந்தன.

சில வாரங்கள் ஆறு, ஏழு படங்கள் வரை வெளியாகின. இத்தனை படங்கள் வெளியானாலும் வசூல் அள்ளிய திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை, 87 திரைப்படங்கள் வெளியாகி இருந்தன. மே மாதம் மட்டும், அரண்மனை 4, ஸ்டார், இங்க நான்தான் கிங்கு உட்பட 23 புதிய திரைப்படங்கள் வெளியாகின. இதையும் சேர்த்து மே மாதம் வரை 110 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. கடந்த 2023-ம் ஆண்டில், மே வரை 95 திரைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தன.

இந்த 110 படங்களில், சிறுபட்ஜெட் (ரூ.5 கோடிக்குள் தயாரிக்கப்பட்டவை) படங்கள் 89. இதில் மணிகண்டனின் ‘லவ்வர்’, கவினின் ‘ஸ்டார்’, சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா நடித்த அரண்மனை 4 உட்பட சில படங்கள் மட்டுமே வசூல் ஈட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நிலை தொடர்ந்தால், இந்த ஆண்டு 280-க்கும் (2023-ல் 258) அதிகமான திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப் படுகிறது. கடைசி மாதமான டிசம்பரில் வழக்கமாக அதிகப் படங்கள் வெளியாவது உண்டு. அதையும் சேர்த்தால் மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்.

“அதிக திரைப்படங்கள் வெளியாவது பிரச்சினையில்லை. தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்ததா என்பதுதான் முக்கியம். அது இந்த 6 மாதத்தில் குறைவுதான்” என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE