சல்மான் கானை கொல்ல சதி: 4 பேரை கைது செய்த நவி மும்பை காவல் துறை

By செய்திப்பிரிவு

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய நோட்டமிட்டு வந்ததாக லாரன்ஸ் பிஷ்னோய் கேங்கைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என நவி மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த மாதம் சல்மான் கானின் வீட்டுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 14-ம் தேதி மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பு 5 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகியோரை 48 மணி நேரத்தில் மும்பை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஏப்ரல் 26-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியதாக அனுஜ் தபன் மற்றும் சோனு சுபாஷ் சுந்தர் ஆகியோர் பஞ்சாபில் வைத்து கைது செய்யபட்டனர்.

இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக, லாரன்ஸ் பிஷ்னோயின் கேங்கைச் சேர்ந்த 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர் என நவி மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் கூறுகையில், “பிஷ்னோய் லாரன்ஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் பன்வெல் - கலம்போலி பகுதியில் வசிப்பதாகவும், பந்த்ராவில் உள்ள சல்மான் கானின் வீடு, பன்வெல்லில் உள்ள அவரது பண்ணை வீடு மற்றும் சல்மான் கான் படப்பிடிப்பு நடத்தும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களை கண்காணித்து வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி 4 பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் சல்மான் கான் எங்கெங்கே செல்கிறார் என்பதை நோட்டமிட்டு வந்தனர். மேலும், அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி சம்பத் நெஹ்ரா ஆகியோர் இதற்கு மூளையாக செயல்பட்டு வருகின்றனர்” என தெரிவித்தனர்.

பின்னணி என்ன? - குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் இருக்கிறார் கேங்க்ஸ்டரான லாரன்ஸ் பிஷ்னோய். ஜோத்பூரின் பிஷ்னாய் குழுவைச் சேர்ந்தவர்கள், கரும்புலிகளை (blackbuck) தங்கள் ஆன்மிகத் தலைவரான ஜாம்பாஜி என்றும் அழைக்கப்படும் குரு பகவான் ஜம்பேஷ்வரின் மறுபிறவியாகக் கருதி மிகவும் மரியாதையுடன் அணுகும் பழக்கமுடையவர்கள்.

கடந்த 1998-ம் ஆண்டு நடிகர் சல்மான் கான் படப்பிடிப்பின்போது, ராஜஸ்தானின் கன்கனியில் உள்ள இரண்டு கரும்புலிகளை வேட்டையாடிக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பிஷ்னோய் சமூகத்தினரை கோபமடையச் செய்தது.

தாங்கள் புனிதமாக கருதும் கரும்புலிகளை கொன்றதற்காக, கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018-ம் ஆண்டு நேரடியாக சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அந்த பழிவாங்கும் உணர்ச்சி இன்றும் சல்மான் கானை தொடர்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE