“தமிழகத்தில் யாருடைய வாலும் ஆடாது” - பிரகாஷ் ராஜ் அரசியல் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: “சாதி அரசியல் குறித்து நீங்கள் அதிகம் பேசுகிறீர்கள் என்று அண்மையில் என்னிடம் கேட்டார்கள். ‘கருணாநிதி இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் இருக்காதே’ என்று நான் சொன்னேன். அவர் இருக்கின்ற வரைக்கும் யாராலும் இங்கே வாலாட்ட முடியாது” என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை சென்னை பாரிமுனையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது ஓர் அற்புதமான ஆவணத் தொகுப்பு. கடந்த கால நியாபகங்கள் எனக்குள் வந்து செல்கின்றன.

‘இருவர்’ படத்தில் நடித்து 28 வருடங்கள் கடந்துவிட்டன. 30 ஆண்டுகளுக்கு முன் நான் தமிழகத்து வரும்போது இருந்த கருணாநிதி நினைவுக்கு வருகிறார். கருணாநிதி குறித்த அற்புதமான ஓர் ஆவணப் பதிவு இது. இன்றைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கருணாநிதியுடனேயே இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும் ஓர் அற்புதமான பதிவு.

எனக்கு பல காரணங்களால், கருணாநிதியை பிடிக்கும். அவராக, நான் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு ‘இருவர்’ படத்தில் கிடைத்தது. அந்தப் படத்துக்காக 2 வருடங்கள் நான் கருணாநிதி குறித்து படிக்க வேண்டியிருந்தது. அவருடைய வாழ்க்கை பயணம் உள்ளிட்டவற்றை உணரவேண்டியிருந்தது. ஏனென்றால் அந்தக் கதாபாத்திரத்தை வெறும் நடிகராக மட்டும் நடிக்க முடியாது. அவரை நான் சந்திக்க முடிந்தது. படிக்க முடிந்தது. இன்று நான் இப்படி பேசுவதற்கு காரணம் அவரை படித்ததும் ஒரு காரணம்.

சாதி அரசியல் குறித்து நீங்கள் அதிகம் பேசுகிறீர்கள் என்று அண்மையில் என்னிடம் கேட்டார்கள். ‘கருணாநிதி இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் இருக்காதே’ என்று சொன்னேன். அவர் இருக்கின்ற வரைக்கும் யாராலும் இங்கே வாலாட்ட முடியாது. நூற்றாண்டின் முதல்வர் அவர். 69 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர். ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் என்னிடம், ‘கருணாநிதி இல்லை என்றால் இன்று நான் அதிகாரியாக ஆகியிருக்க முடியாது’ என்று கூறினார்.

தண்டவாளத்தில் படுத்துகொண்டு ரயில்வரும் காட்சியில் எனக்கு வியர்த்துவிட்டது. அது ஒரு படம். ஆனால் உண்மையில் செய்தாரே கருணாநிதி அவருக்குள் எப்படியான நெருப்பு இருந்திருக்க வேண்டும். என்னை மிகவும் அன்பாக பார்த்துக் கொண்டவர். ‘அபியும் நானும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு, அதுவும், ஒரு நாளுக்கு முன்புதான் சொன்னோம்.

அடுத்த நாளே தன்னுடைய மகளுடன் வந்துவிட்டார். ‘இருவர்’, ‘காஞ்சிவரம்’ படம் குறித்தெல்லாம் பேசுவார். இலக்கியம் பேசுவார். கொள்கைகளை பேசுவார். சாதியை வைத்துக்கொண்டோ, பணத்தை வைத்துக்கொண்டோ அரசியலுக்கு வருவது பெரிதல்ல. கொள்கைகளை முன்வைத்து அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அவருக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் கொள்கைகளை சுமந்து கொண்டு வருகிறார்.

நிறைய படப்பிடிப்பை பார்த்துள்ளேன். கன்னியாகுமரி படப்பிடிப்பில் அவரே (பிரதமர் மோடி) எல்லாரையும் அழைத்துக்கொண்டு செல்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே அவர்தான். ஜூன் 4-ம் தேதிக்கான தமிழகத்தின் முடிவு தெரிந்துவிட்டது. இங்கே யாருடைய வாலும் ஆடாது.

மத்தியில் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று நம்புகிறேன். அப்படித்தான் தெரிகிறது. ஏனென்றால் அரசியலில் எதிர்கட்சி ஜெயிக்காது; ஆளும் கட்சி தான் தோற்று போகும். தோற்றுப்போவதற்கான அனைத்து வேலைகளையும் அவர் செய்துவிட்டார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்