“விஜய் அரசியலில் ஈடுபடுவதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு” - எஸ்.ஏ.சந்திரசேகர்

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியர் சாமி தரிசனம் செய்தனர். தரிசனத்துக்கு பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், “எனது மகன் அரசியலில் ஈடுபடுவது குறித்து எனக்கு எப்போதும் ஈடுபாடு உண்டு” என்று தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயிலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் தாயார் ஷோபா அவ்வப்போது வருகை தருவது வழக்கம். இந்தச் சூழ்நிலையில் இன்று காலை நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அவரது மனைவி ஷோபா ஆகியோர் தரிசனத்துக்காக காமாட்சியம்மன் கோயிலுக்கு வந்தனர்.

காஞ்சிபுரம் வந்த அவர்கள் முதலில் சங்கர மடத்துக்குச் சென்றனர். சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர். இதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் அவர்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. தரிசனத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட ஏஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கி இருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, “என் பிள்ளைக்கு எனது வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் எப்போதும் இருக்கும்” என்றார்.

‘முன்பெல்லாம் விஜய் அரசியலுக்கு வருவதில் நீங்கள் அதிக ஈடுபாடு காட்டினீர்கள். இப்போது அந்த ஈடுபாடு குறைந்திருப்பது போல் தெரிகிறதே’ என்று கேட்டதற்கு, “என் பிள்ளை அரசியலில் ஈடுபடுவது குறித்து எனக்கு எப்போதும் ஈடுபாடு உண்டு” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE