“காவ்யா மாறனின் கண்ணீர் என்னை பாதித்தது” - அமிதாப் பச்சன் உருக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “ஹைதராபாத் அணியின் உரிமையாளரான அந்த இளம் பெண் (காவ்யா மாறன்), தோல்விக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டது என் மனதை பாதித்தது. பரவாயில்லை டியர். நாளை என்பது மற்றுமொரு நாளே” என அமிதாப் பச்சன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது தனிப்பட்ட வலைதளத்தில் (Blog), “ஐபிஎல் இறுதிப்போட்டி நிறைவடைந்துவிட்டது. கொல்கத்தா அணி உறுதியான வெற்றியை பதிவு செய்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ஆட்டம் ஏமாற்றமளிக்கிறது. ஏனென்றால் ஹைதராபாத் ஒரு சிறந்த அணி. கடந்த ஆட்டங்களில் அவர்கள் சிறப்பாக விளையாடினர்.

அந்த அணியின் உரிமையாளரான அந்த இளம்பெண் (காவ்யா மாறன்), தோல்விக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்டு அழுதது என் மனதை பாதித்தது. தான் உணர்ச்சிவசப்படுவதை வெளிக்காட்டாமல் கேமராக்களில் இருந்து அவர் முகத்தை திருப்பிக்கொண்டார். அதைப் பார்க்கும்போது வருத்தமாக இருந்தது. பரவாயில்லை. நாளை என்பது மற்றுமொரு நாள் மை டியர். ஒருபோதும் பின்வாங்கிவிடாதீர்கள். நாளை என்பது மற்றுமொரு நாள்தான்” என பதிவிட்டுள்ளார்.

கொல்கத்தா வெற்றி: முன்னதாக, நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. வெற்றியைத் தொடர்ந்து அந்த அணியின் உரிமையாளர்களான ஷாருக்கான் மற்றும் ஜூஹி சாவ்லா இருவரும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மிதந்தனர்.

அதேநேரம் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் கண்ணீருடன் கைதட்டிக்கொண்டிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதைக்கண்ட அமிதாப் பச்சன் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் தனது கருத்தை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE