Cannes 2024 | ‘வரலாற்றை மாற்றி எழுதிய பெண்கள்’ - பாயல் கபாடியாவுக்கு குவியும் வாழ்த்துகள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாயல் கபாடியா இயக்கியுள்ள ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ திரைப்படத்துக்கு கான் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கான் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கான் நகரில் கடந்த மே 15ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடந்தது. இதில் எழுத்தாளரும் இயக்குநருமான பாயல் கபாடியாவின் முதல் முழுநீள திரைப்படமான ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’ போட்டியிட்டது. இந்தியா சார்பில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப்பனை விருதுக்குப் போட்டியிடும் முதல் திரைப்படம் என்ற இப்படம் பெற்றது.

கனி குஸ்ருதி, திவ்ய பிரபா உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்த இப்படம், மும்பையில் வாழும் இரண்டு கேரள செவிலியர்களைப் பற்றி பேசுகிறது. இப்படத்துக்கு கான் விழாவில் தங்கப்பனை விருதுக்கு அடுத்த உயரிய விருதாக கருதப்படும் ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தின் திரையிடலுக்குப் பிறகு பார்வையாளர்கள் எழுந்து நின்று 8 நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.

இதையடுத்து, படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்தில், “77வது கான் சர்வதேச திரைப்பட விழாவில் பாயல் கபாடியாவின் ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்' படைப்பு கிராண்ட் பிரிக்ஸ் விருது வென்ற வரலாற்று சாதனைக்காக இந்தியா பெருமை கொள்கிறது.

இந்திய திரைப்படக் கல்லூரியின் முன்னாள் மாணவரின் திறமை உலக அரங்கில் பிரகாசிக்கிறது. இந்திய படைப்பாற்றலின் பார்வையை உலகுக்கு பறைசாற்றுகிறது. இந்த மதிப்புமிக்க பாராட்டு அவரது திறமைகளை கவுரவிப்பதோடு மட்டுமல்லாமல், புதிய தலைமுறை இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் ஊக்கம் அளிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது வாழ்த்தில், “77வது கான் சர்வதேச திரைப்பட விழாவில் பிரகாசிக்கும் இந்திய நட்சத்திரங்கள்!.

மதிப்புமிக்க கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றதற்காக பாயல் கபாடியா மற்றும் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள்.

அதேபோல், ‘தி ஷேம்லெஸ்’ படத்தில் நடித்ததற்காக அன் செர்டெய்ன் ரிகார்ட் பிரிவின் கீழ் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற அனசூயா சென்குப்தாவுக்கும் பாராட்டுகள். இந்த பெண்கள் வரலாற்றை மாற்றி எழுதி, முழு இந்திய திரைப்பட உலகுக்கும் ஊக்கமளித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE