The Garfield Movie Review: பகடியும், கலகலப்பும் நிறைந்த ரீபூட் எப்படி?

By சல்மான்

ஜிம் டேவிஸ் உருவாக்கத்தில் காமிக்ஸாகவும், பின்னர் 80 - 90களில் கார்ட்டூன் தொடராகவும் உலகமெங்கும் பிரபலமான கதாபாத்திரம் கார்ஃபீல்ட். சோம்பேறித்தனமும், நகைச்சுவையும் கொண்ட ஒரு பூனை கதாபாத்திரம்தான் இந்த கார்ஃபீல்ட். இதனை அடிப்படையாகக் கொண்டு தற்போது முழுநீள அனிமேஷன் திரைப்படமாக ரீபூட் செய்யப்பட்டுள்ளது ‘தி கார்ஃபீல்ட் மூவி’.

சிறுவயதில் தனது தந்தையால் சாலையில் கைவிடப்பட்ட கார்ஃபீல்ட் பூனை, ஜான் என்னும் ஒரு நல்ல மனிதனால் தத்தெடுத்து வளர்க்கப்படுகிறது. அல்லது அதன் கூற்றுப்படி அதுதான் ஜானை தத்தெடுத்து வளர்க்கிறது. சோம்பேறித்தனமும், எந்நேரமும் உணவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் கார்ஃபீல்டின் வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அதனை விட்டுச் சென்ற அதன் தந்தை விக், மீண்டும் குறுக்கிடுகிறது. கூடவே விக்கின் பழைய பார்ட்னரான ஜின்க்ஸ் என்ற பெண் பூனையால் ஒரு பெரிய சிக்கலும் ஏற்படுகிறது. இதிலிருந்து கார்ஃபீல்டு மீண்டதா என்பதை இப்படம் நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறது.

இந்த படத்தில் குறிப்பிடத்தக்க அம்சம், கார்ஃபீல்ட் கதாபாத்திரத்தின் அசல்தன்மையை எந்தவிதத்தில் மாற்றாமல் அப்படியே மீண்டும் கொண்டுவந்ததுதான். தன்னை எப்போதும் மற்றவர்களை விட (அது விலங்கோ மனிதனோ) ஒருபடி மேலாக நினைப்பது, எந்நேரமும் உணவை பற்றிய சிந்தனை, குறிப்பாக பகடி. படம் முழுக்க தூவப்பட்டுள்ள குபீர் நகைச்சுவை வசனங்கள் பெரிதும் கைகொடுக்கின்றன. கார்ஃபீல்டுக்கும் அதன் தந்தைக்கும் இடையிலான வசனங்கள், காட்சிகளும், இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரியும் ரசிக்க வைக்கின்றன.

கார்ஃபீல்டு சொன்னதையெல்லாம் செய்யும் செல்லநாய் ஓடி (Odie). கார்ஃபீல்டின் உரிமையாளர் ஜான், ஓட்டோ என்ற பெயர் கொண்ட எருது உள்ளிட்ட கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றன. அதே போல கார்ஃபீல்டுக்கும் அதன் தந்தைக்கும் இடையிலான எமோஷனல் காட்சிகளும் ஹாலிவுட் அனிமேஷன் படங்களுக்கே உரிய நேர்த்தியுடன் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

கார்ஃபீல்டுக்கு நடிகர் கிறிஸ் ப்ராட் (மார்வெல் ஸ்டார்லார்ட்) மற்றும் விக் கேரக்டருக்கு சாமுவேல் ஜாக்சன் ஆகியோர் தங்கள் குரல்களின் மூலம் வலு சேர்த்துள்ளனர். படத்தின் குறை என்று பார்த்தால் அதன் அனிமேஷன் என்று சொல்லலாம். குழந்தைகள் ரசிப்பார்கள் என்பதற்காக பெரியளவில் மெனக்கெடாமல் ஒருவித ப்ளாஸ்டிக் தன்மை கொண்ட அனிமேசனில் உருவாக்கியிருப்பார்கள் போலும். ஆனால் குழந்தைகள் குதூகலிக்கும் வகையிலான ஸ்லாப்ஸ்டிக் காமெடியும் பெரியளவில் இல்லை. இதனால் பெரியவர்களுக்கான படமாகவும் இல்லாமல் குழந்தைகள் படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் நிற்கிறது.

எனினும் கோடை விடுமுறையில் குடும்பத்துடன் ஒரு ஜாலியான அனிமேஷன் படத்துக்கு செல்ல விரும்புபவர்கள் தாராளமாக பார்க்கலாம். ‘கார்ஃபீல்ட்’ உங்களை ஏமாற்றாது. படம் தமிழிலும் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE