இங்க நான் தான் கிங்கு Review: சந்தானத்தின் சிரிப்பூட்டும் ‘முயற்சி’ எப்படி?

By கலிலுல்லா

கடன் வாங்கி, அதை அடைக்கத் தவிக்கும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் சொல்லும் முயற்சியே படத்தின் ஒன்லைன்.

90’ஸ் கிட்டான வெற்றிவேல் (சந்தானம்) திருமணத்துக்காக வரன் தேடி அலைய, சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற கன்டிஷனால் ரூ.25 லட்சத்துக்கு கடன் வாங்கி வீடு கட்டுகிறார். தனக்கு இருக்கும் கடனை அடைக்க முன்வரும் பெண்ணை தேடி திருமணம் செய்ய தேடி அலையும் அவருக்கு, ஜமீன் குடும்பத்தில் வரன் அமைய, திருமணமும் நடக்கிறது. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட்.

இதற்கு மறுபுறம் சென்னையில் குண்டுவெடிப்பை நிகழ்த்த தீவிரவாதிகள் கூட்டம் சதித்திட்டம் தீட்டுகிறது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றிவேல் குடும்பத்தில் சிக்கி கொள்ள திரும்பங்கள் நிகழ்கின்றன. இறுதியில் வெற்றிவேல் தன்னுடைய கடனை அடைத்தாரா? சென்னையில் குண்டு வெடித்ததா? - இப்படி இரு வேறு கதைகளை முடிச்சுப்போட்டு சொல்லியிருக்கும் படம்தான் ‘இங்க நான் தான் கிங்கு’.

வரன் தேடி அலைவது, ஜமீன் வீடு பில்டப், அதையொட்டி நிகழும் ஏமாற்றம், தொடர்ந்து சில திருப்பங்கள் என நகரும் இடைவேளைக்கு முன்பான காட்சிகள் சந்தானத்தின் ஒன்லைனர்களால் புன்முறுவலுக்கு இடமளித்து நகர்கிறது. இடையில் சென்டிமென்ட் காட்சிகள் கதையுடன் ஒட்டாமலும், சந்தானத்துக்கு பொருந்தாமலும், துருத்திக் கொண்டிருக்கிறது.

இயக்குநர் ஆனந்த் நாராயணன், எழுத்தாளர் எழிச்சூர் அரவிந்தனின் கூட்டு முயற்சியின் சில ஐடியாக்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, மனோபாலாவின் ‘விக்ரம்’ ஸ்பூஃப் காட்சி, ரோலக்ஸ் பெயர் கொண்ட மாறன் கதாபாத்திரம், தம்பி ராமையா ‘ஜெய்ஹிந்த்’ என சொல்லும்போது, ‘உன் சம்மந்தி மாதிரி பண்றியா’ என நிஜ சம்பவங்களையும், விவேக் பிரச்சன்னாவிடம், ‘உனக்கு யார்ரா டுயல் ரோல் கொடுத்தா’ போன்ற நம்மூடைய மைண்ட் வாய்ஸையும் கோர்த்திருப்பது பார்வையாளர்களை கவர்கிறது.

ஆனால் ‘டபரா மூஞ்சி’ போன்ற பிறரை புண்படுத்தும்படியான ‘உருவகேலி’யை காமெடி என நினைத்துக் கொண்டிருக்கும் சந்தானம் ‘ஏஐ’ காலத்திலும் அதை இறுகப்பற்றிக் கொண்டிருப்பது அவரின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.

மேற்கண்ட சில சுவாரஸ்யமான ஐடியாக்களையும், ஒன்லைனர்களையும் தாண்டி படம் எங்குமே சோபிக்கவில்லை. நகைச்சுவையைக்கூட கணிக்கும் அளவுக்கு அவுட்டேட்டான இடங்கள், தீவிரவாதி என சொல்லப்படும் கூட்டத்தை லோக்கல் ரவுடிகளைப் போல் டீல் செய்வது, டம்மி காவல் துறை, கிஞ்சித்தும் இல்லாத லாஜிக்குகள், தேவையில்லாத குண்டுவெடிப்பு ட்ராக், திணிக்கப்பட்ட பாடல்கள் என பல இடங்கள் சோதிக்கவே செய்கின்றன.

சந்தானம் தனது வழக்கமான நடிப்பால் மொத்தப் படத்தையும் தாங்குகிறார். தம்பி ராமையா, பால சரவணனிடம் மாட்டிக்கொண்டு அவர் முழிக்கும் இடங்களில் உடல்மொழியால் கலகலப்பூட்டுகிறார். அறிமுக நடிகை பிரியாலயா கொடுத்ததை சிறப்பாக கையாண்டிருக்கிறார். தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, முனிஷ் காந்த், லொள்ளுசபா மாறன், மனோபாலா, சேஷூ, கூல் சுரேஷ் ஆகியோர் தேர்ந்த நடிப்பில் கவனம் பெறுகின்றனர். யூடியூபர்கள், இன்ஃபுளூவன்சர்களை படத்தில் கொண்டுவந்திருப்பது வரவேற்கத்தக்கது.

பழைய டி.இமானை ‘மாயோனே’ பாடலின் வழியே பார்ப்பது மகிழ்ச்சி. மற்ற பாடல்கள் பெரிய அளவில் ஈர்ப்பை கொடுக்கவில்லை என்றாலும், பின்னணி இசையில், வைரல் வசனங்களை வைத்து புதுமை ஒன்றை படைத்திருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு குவாலிட்டி. தியாகராஜனின் படத்தொகுப்பில் கறார் காட்டியிருக்கலாம்.

மொத்தமாக சில காட்சிகளையும், காமெடியையும் ரசிக்க பல இடங்களில் பொறுமை காக்க முடியுமானால் ‘நீங்கள் தான் கிங்கு’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE