“மற்றவர்களை கவனிப்பது என் பணியல்ல” - இளையராஜா

By செய்திப்பிரிவு

சென்னை: “மற்றவர்களை கவனிப்பது என் வேலையில்லை. என் வேலையை கவனிப்பதுதான் என் வேலை. என் வழியில் சுத்தமாக சென்று கொண்டிருக்கிறேன். கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்ஃபோனியை எழுதி முடித்துவிட்டேன்” என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “வணக்கம். என்னைப் பற்றி ஏதோ ஒரு வகையில் தினமும் வீடியோக்கள் வெளியாகின்றன என்ற செய்தியை வேண்டியவர்கள் மூலமாக கேள்விப்படுகிறேன். நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. காரணம், மற்றவர்களை கவனிப்பது என் வேலையில்லை. என் வேலையை கவனிப்பது என் வேலை. என் வழியில் சுத்தமாக சென்று கொண்டிருக்கிறேன்.

நீங்கள் என்னை வாழ்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்ஃபோனியை எழுதி முடித்துவிட்டேன். இங்கே பட இசையில் கவனம் செலுத்திக்கொண்டும், இடையில் விழாக்களுக்கு சென்றுகொண்டிருந்தபோதிலும், ஒரு சிம்ஃபோனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்துவிட்டேன் என்ற எனக்கு சந்தோஷமான செய்தியை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். பியூர் சிம்ஃபோனியாக எழுதி முடித்துவிட்டேன் என்பதை என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகமான இந்த செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பேசியுள்ளார்.

பாடலா? இசையா? - இசையமைப்பாளர் இளையராஜா சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பாடல்களை சில நிறுவனங்கள் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தப்படுவதாக வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு நீதிபதி “பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்துதான் ஒரு பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” ” என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வைரமுத்து, இசை பெரியதா? பாடல் பெரியதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இது தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தது. தற்போது அது குறித்து சூசகமாக தனது கருத்தையும் மேற்கண்ட வீடியோவில் இளையராஜா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE