50 எல்ஐசி பாலிசி, 8 கிரிமினல் வழக்கு: கங்கனாவின் வேட்புமனுவில் தகவல்

By செய்திப்பிரிவு

மண்டி: தன் மீது எட்டு கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும், 50 எல்ஐசி பாலிசிகள் தன் பெயரில் இருப்பதாகவும் நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத் தனது தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் 4 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 3 தொகுதிகள் பாஜக வசம் உள்ளன. மண்டி மக்களவைத் தொகுதி மட்டும் காங்கிரஸ் வசம் உள்ளது. தற்போதைய மக்களவைத் தேர்தலில் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் களமிறக்கப்பட்டு உள்ளார்.

வரும் ஜூன் 1-ம் தேதி மண்டி மக்களவைத் தொகுதிக்கு வாக்குப் பதிவு நடக்கிறது. இதற்காக பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் நேற்று (மே 14) மண்டியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவர் தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தன்னிடம் ரூ.62.92 கோடி அசையா சொத்து, ரூ.28.73 கோடி அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதில் ரூ.3.91 மதிப்புள்ள ஒரு மெர்சிடீஸ் மேபெக் சொகுசு காரும் அடக்கம்.

மேலும் தனக்கு ரூ.17.38 கோடிக்கும் அதிகமான கடன் இருப்பதாகவும், ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ரூ.1.35 கோடி வங்கி இருப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கங்கனாவிடம் ₹5 கோடி மதிப்புள்ள 6.70 கிலோ தங்கம், ₹5 லட்சம் மதிப்புள்ள 60 கிலோ வெள்ளி மற்றும் சுமார் ₹3 கோடி மதிப்புள்ள 14 காரட் வைரங்கள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இத்துடன் தன் மீது 8 கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் கங்கனா குறிப்பிட்டுள்ளார். அதில் மூன்று வழக்குகள் மத உணர்வுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக பதியப்பட்டவை.

இது தவிர கங்கனா குறிப்பிட்டுள்ள இன்னொரு விஷயம், சமூக வலைதளங்களில் ட்ரோல்களுக்கு காரணமாகி விட்டது. தன் பெயரில் 50 எல்ஐசி பாலிசிகல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதை வைத்து நெட்டிசன்கள் பலரும் கடுமையாக கேலி செய்ய தொடங்கிவிட்டனர். கங்கனாவின் எல்ஐசி ஏஜென்ட் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE