திரை விமர்சனம்: ஸ்டார்

By செய்திப்பிரிவு

சினிமாவில் ஹீரோவாக ஜெயிக்க வேண்டும் என்ற கனவுடன் வளர்கிறான் எளிய குடும்பத்தைச் சேர்ந்த கலையரசன் (கவின்). கனவு நனவாகும் தருணத்தில் நிகழும் ஒரு விபத்தும் அதைத் தொடர்ந்து வரும் நடுத்தர வர்க்க அழுத்தங்களும் அவனது இலக்கை எப்படியெல்லாம் அலைக்கழித்தன என்பது கதை.

தன்னால் அடையமுடியாமல் போன கனவை, மகனாவது வென்றெடுக்க வேண்டும் என்று பக்கத் துணையாக நின்று தோள் கொடுக்கும் அப்பா, மகன் படித்து நல்ல வேலைக்குப் போய், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தால் அதுவே மேலானது என நினைக்கும் அம்மா எனத் துணைக் கதாபாத்திரங்கள் முழுமையுடன் சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், முதன்மைக் கதாபாத்திரமான மகன், தனது கனவை வெறித்தனமாக நேசிப்பதில் காட்டும் அக்கறையை, அந்தக் கனவை அடைவதற்காக தனது தேடலையும் தகுதியையும் வளர்த்துக்கொள்வதில் காட்டாத ஒருவனாக, அன்றாட வாழ்வின் சில்லறைக் காரணங்களால் விழுந்து எழுபவனாக சிதறடிக்கப்பட்டிருக்கிறான். இதற்கு அவன் வாழ்க்கைக்குள் வலியத் திணிக்கப்பட்டிருக்கும் காதலும் அதில் எந்தப் புதுமையும் இல்லாததும் காரணம்.

விபத்தால் ஏற்பட்ட முகத் தழும்பைப் போக்க உரிய சிகிச்சைகள் இருக்கும்போது, அதனால் அவமானப்பட்டுக் கூனிக் குறுகி முடங்குவது, முதல் நாயகி எதற்காகக் காதலித்தார், எதற்காக விட்டுச் சென்றார் என்பதற்கான காரணங்களில் வலுவில்லை. ‘கலையை உருவாக்குகிறவனை விட, ரசிக்கிறவனுக்குத் தான் அது சொந்தம்’ என்பது போன்று வரும் வசனங்கள் பல இடங்களில் கவர்கின்றன.

நடிகனுக்கு முகம் தான் முக்கியம் என்கிற அப்பாவின் ஊட்டலால், முகத்தை மறைத்துக்கொண்டு காதலுக்காக அடி வாங்குவது, தன்னால் ஊக்கம் பெற்ற பெண்ணுக்காகப் பிடிக்காத வேலைக்குச் செல்வது தொடங்கி, கலையரசன் கதாபாத்திரத்தின் எதிர்பாராச் சூழ்நிலைகளை நடிப்பில் கச்சிதமாகக் கொண்டுவந்திருக்கும் கவின், ஸ்கோர் போர்டில் முதலிடம் பிடிக்கிறார். அடுத்து அவரது அப்பா லால், அம்மா கீதா கைலாசம், காதலி அதிதி போகன்கர் மிகையில்லாத நடிப்பால் மனதைத் தொடுகிறார்கள்.

திரைப்படமாக சில பகுதிகள், சில காட்சிகள் ஒளிரும் இந்தப் படத்தின் ஒழுங்கின்மையை, பின்னணி இசை, பாடல்களால் நேர்செய்ய முயன்றிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. 90-களின் காலகட்டத்தை நினைவூட்டும் கலை இயக்கம், கே.எழிலரசுவின் ஈர்ப்புமிக்க ஒளிப்பதிவு ஆகியன பொறுமையிழப்பு நோக்கித் தள்ளாமல் காப்பாற்றுகின்றன.

டிஜிட்டல் படப்பதிவு, உருவாக்கம் எனக் கடைக்கோடி மனிதனுக்கும் சினிமா எளிதில் வசமாகும் காலத்தில், நடிகனாகும் கனவுடன் வரவேண்டாம் என எதிர்மறையாக பயமுறுத்தும் இந்த ‘ஸ்டாரி’ல் ஒளி குறைவு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்