பேரழிவின் தொடக்கம் - A Quiet Place: Day One புதிய ட்ரெய்லர் எப்படி? 

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ‘எ கொயட் ப்ளேஸ்’ படத்தின் மூன்றாம் பாகமான ‘எ கொயட் ப்ளேஸ்: டே ஒன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘எ கொயட் ப்ளேஸ்’. எமிலி ப்ளன்ட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த இப்படம், போஸ்ட் அபோகலிப்டிக் வகையைச் சார்ந்தது. உலகமே ஏலியன்களால் அழிக்கப்பட்டு, அதன் பிறகு எஞ்சியிருக்கும் மனிதர்களை சுற்றி நடக்கும் கதை. இப்படத்தைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு வெளியான இதன் இரண்டாம் பாகமும் வரவேற்பை பெற்றது.

தற்போது இதன் மூன்றாம் பாகமான ‘எ கொயட் ப்ளேஸ்: டே ஒன்’ உருவாகியுள்ளது. லுபிடா நியாங்கோ, ஜோசப் குயின் நடித்த இப்படம் வரும் ஜூன் 28 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - ‘எ கொயட் ப்ளேஸ்’ படவரிசைகளில் வரும் ஏலியன்களுக்கு பார்வைத் திறன் கிடையாது. அவை தங்கள் காதுகளை பயன்படுத்தி சத்தம் வரும் திசையை நோக்கிச் சென்று மனிதர்களை கொன்று குவிக்கும். அவற்றிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் யாரும் வாயைத் திறந்து பேசவோ, சத்தம் போடவே செய்யக் கூடாது. இதுதான் முதல் இரண்டு பாகங்களிலும் காட்டப்பட்டிருக்கும்.

தற்போது வெளியாக உள்ள இந்த மூன்றாம் பாகம், அந்த ஏலியன்கள் எப்படி பூமிக்கு வந்து மனிதர்களை அழிக்கத் தொடங்கின என்பதை பேசுகிறது. நாயகி லுபிடா நியாங்கோ தனது பூனையுடன் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது வானத்தில் இருந்து எரிகல் போல ஏதோ ஒன்று விழுகிறது. அதிலிருந்து வெளிப்படும் ஏலியன்கள் பூமியை (அமெரிக்காவை) துவம்சம் செய்வதாக காட்டப்படுகிறது.

ஒரு ஹாரர் படத்துக்கு சற்றும் குறைவில்லாத திகில் காட்சிகள் முந்தைய இரண்டும் பாகங்களிலும் நிறைய உண்டு. அது போன்ற சீட் நுனிக்கு கொண்டு வரும் காட்சிகள் இதிலும் நிறைய இருக்கலாம் என்பதை ட்ரெய்லர் உறுதி அளிக்கிறது. குறிப்பாக ட்ரெய்லரின் இறுதியில் வரும் கதவை திறக்கும் காட்சி ஓர் உதாரணம்.

முந்தைய படங்களில் இல்லாத புதிய கதாபாத்திரங்களே இதில் பிரதானமாக காட்டப்படுகின்றன. ஹாலிவுட்டில் அண்மைக் காலமாக ஹாரர் த்ரில்லர் படங்களுக்கு நிலவும் வறட்சியை ‘எ கொயட் ப்ளேஸ்: டே ஒன்’ போக்கும் என்று நம்பலாம்.

‘எ கொயட் ப்ளேஸ்: டே ஒன்’ ட்ரெய்லர் வீடியோ:


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE