ரசவாதி Review: விறுவிறுப்பு தந்ததா சாந்தகுமார், அர்ஜுன் தாஸ் கூட்டணி?

By டெக்ஸ்டர்

2011-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அதிகம் பேசப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘மௌன குரு’ படத்தை இயக்கிய சாந்தகுமாரின் மூன்றாவது படமாக வெளியாகியுள்ளது ‘ரசவாதி’. அவரின் ’மகாமுனி’ படம் வெளியாகி 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இப்படம் திரைக்கதை ரீதியாக கவனிக்க வைத்ததா என்று பார்க்கலாம்.

கடலூரில் ஒரு வழக்கில் இருந்து தப்பிக்க தனது உயர் அதிகாரியை கொலை செய்துவிட்டு அதனை மறைத்து கொடைக்கானலுக்கு மாற்றலாகி வருகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரசுராஜ் (சுஜித் சங்கர்). அதே கொடைக்கானலில் சித்த மருத்துவராக இருக்கும் சதாசிவ பாண்டியன் (அர்ஜுன் தாஸ்), யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல், இயற்கையை நேசிக்கும் மனம் கொண்டவர்.

தன் சொந்த பிரச்சினை காரணமாக ஐடி வேலையை விட்டு கொடைக்கானலில் உள்ள ஒரு ஹோட்டலில் மேனேஜராக வேலைக்கு வரும் சூர்யா (தன்யா ரவிச்சந்திரன்), சதாசிவன் இருவரும் காதலில் விழுகின்றனர். உளவியல் சிக்கல் கொண்ட பரசுராஜ், இருவரது காதலையும் பிரிப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களை மேற்கொள்கிறார். பரசுராஜின் உள்நோக்கத்துக்கான பின்னணி என்ன? சிக்கல்களிலிருந்து நாயகன், நாயகி இருவரும் மீண்டார்களா? - இதுவே ‘ரசவாதி’ சொல்லும் திரைக்கதை.

ரோட்டில் இறந்து கிடக்கும் புறாவுக்கு சிபிஆர் சிகிச்சை கொடுத்து காப்பாற்றி பறக்க விடும் நாயகன். இன்னொரு புறம், தன் வீட்டில் பொறியில் சிக்கிய எலியைக் கூட எரித்துக் கொல்லும் வில்லன். இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பொதுவான பின்னணி. இப்படி ஒரு சுவாரஸ்யமான ஒன்லைனை எடுத்துக் கொண்ட இயக்குநர் அதனை முழுநீள திரைக்கதையாக திரையில் கொண்டு வருவதில் கோட்டை விட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

அடிப்படையில் இது ஒரு பழிவாங்கும் கதை. ஆனால், இது ஒரு பழிவாங்கும் கதை என்பதே கிட்டத்தட்ட கிளைமாக்ஸுக்கு சற்று முன்பு வரும் ஃப்ளாஷ்பேக்கில்தான் ஆடியன்ஸுக்கு தெரிய வருகிறது (ஆனால், அதற்கு முன்பே இப்படித்தான் இருக்கப் போகிறது என்பதை யூகிக்க முடிகிறது என்பது வேறு விஷயம்). அப்படி இருக்கும்போது, குறைந்தபட்சம் ஹீரோ - வில்லன் இடையிலான பின்னணி என்னவென்று நமக்கு தெரியவரும் வரை காட்சிகளையாவது சுவாரஸ்யபடுத்தி இருக்கலாம்.

முக்கால்வாசி படம் எதை நோக்கிப் போகிறது, ஹீரோவின் நோக்கம் என்ன? வில்லனின் நோக்கம் என்ன? என எதுவும் தெரியாமல், கதை எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் தன்மையை காட்ட எதற்காக இத்தனை காட்சிகள் என்று தெரியவில்லை. நாயகன் நல்லவர் என்றும், வில்லன் ஒரு சைக்கோ என்பதையும் காட்ட ஓரிரு காட்சிகள் போதாதா? அவற்றை திரும்பத் திரும்ப ஆடியன்ஸுக்கு பாடம் எடுப்பது போல விளக்கிக் கொண்டிருப்பது சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அர்ஜுன் தான் - தன்யா இடையிலான காதல் காட்சிகளிலும் வலுவில்லை.

சுஜித் சங்கர் - விஜே ரம்யா இடையிலான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. அதேபோல ஹீரோவின் பின்னணிக்கும், வில்லனின் பின்னணிக்கும் இடையே கிளைமாக்ஸில் முடிச்சு போட்ட விதம் சிறப்பு.

படம் முழுக்க கவனிக்க வைக்கும் ஒரே அம்சம் வில்லனாக வரும் சுஜித் சங்கரின் நடிப்பு. சிறுவயதில் குடும்ப வன்முறை சூழலில் வளரும் குழந்தை எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினை எப்படி வளர்ந்தபிறகும் அவனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தனது சிறப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார். ஹீரோ அர்ஜுன் தாஸின் இறுகிய முகமும், குரலும் இயல்பாகவே அவரை இந்த கதாபாத்திரத்துடன் ஒன்றச் செய்துவிடுகின்றன. எனினும் அர்ஜுன் தாஸ் தொடர்ந்து ஒரே போன்ற கதாபாத்திரங்களில் மட்டுமே அவர் நடித்து வருவது போன்ற உணர்வை தவிர்க்க இயலவில்லை.

நாயகியாக வரும் தன்யா ரவிச்சந்திரன், ஹீரோவின் நண்பனாக கல் குவாரியை எதிர்க்கும் கேரக்டரில் வரும் ரிஷிகாந்த், மனநல மருத்துவராக வரும் விஜே ரம்யா, ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளனர். பிளாஷ்பேக்கில் சிறிதுநேரமே வந்தாலும் சிறப்பான நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார் ரேஷ்மா வெங்கடேஷ்.

எஸ்.தமனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை காட்சிகளை தூக்கி நிறுத்த முயல்கிறது. சரவணன் இளவரசுவின் கேமரா கொடைக்கானலுக்கு மேலும் அழகு கூட்டுகிறது.

புகழ்பெற்ற எழுத்தாளார் பாவ்லா கோய்லோ எழுத்தில் 1988-ஆம் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமான கிளாசிக் நாவல் ‘ரசவாதி’ (The Alchemist). ஆனால், அந்த நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இயக்குநர் படம் தொடங்கப்பட்ட போதே தெளிவுப்படுத்திவிட்டார். அப்படி இருந்தும் இந்த படத்துக்கு எதற்காக இந்த பேர் என்று கேட்டால், படத்தில் ஒரே ஒரு இடத்தில் பாதரசத்தை வைத்து அம்மியில் அரைத்துக் கொண்டிருக்கும் ஹீரோ, அதைப் பற்றி தன்னுடைய குருவிடம் கேட்கிறார். அதுதான் ‘ரசத்துக்கும்’ இந்த படத்தின் டைட்டிலுக்கும் உள்ள ஒரே தொடர்பு.

சுவாரஸ்யமான ஒரு ஒன்லைனை எடுத்துக் கொண்டாலும், அதற்கேற்ற பலமான திரைக்கதை இல்லாததால் பரபரப்பான த்ரில்லராக வந்திருக்க வேண்டிய ‘ரசவாதி’ ஈர்க்க தவறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE