‘தக் லைஃப்’ அப்டேட் | முக்கிய கதாபாத்திரத்தில் அசோக் செல்வன்?

By செய்திப்பிரிவு

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. இதில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகினர்.

இந்த நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவி விலகிய காரணத்தால் அவருக்கு பதில் அசோக் செல்வனை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது. அதே போல மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

நேற்று ‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன் நடிப்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதற்காக பிரத்யேக போஸ்டரையும், வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் சிலம்பரசன் கமல்ஹாசனுக்கு மகனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE