நிவின் பாலியின் ‘மலையாளி ஃப்ரம் இந்தியா’ டப்பிங் வெர்ஷன் இல்லாதது ஏன்? - இயக்குநர் விளக்கம்

By செய்திப்பிரிவு

கொச்சி: “ஒரு மலையாளியின் கதையை மலையாளத்திலேயே மக்கள் பார்த்து புரிந்துகொள்ளட்டும். அது பார்வையாளர்களுக்கு கூடுதல் நெருக்கத்தை கொடுக்கும் என்பதால் படத்தை மற்ற மொழிகளில் டப் செய்யவில்லை” என ‘மலையாளி ஃப்ரம் இந்தியா’ படம் குறித்து அதன் இயக்குநர் பேசியுள்ளார்.

மலையாளத்தில் வெளியான ‘ஜன கண மன’ படத்தின் மூலம் திரையுலகில் அழுத்தமாக கால்பதித்தவர் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி. இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘மலையாளி ஃபரம் இந்தியா’. நிவின் பாலி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அனஸ்வரா ராஜன், தயன் ஸ்ரீனிவாசன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் மே 1-ம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தை மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படாதது குறித்து படத்தின் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “நாங்கள் திட்டமிட்டு தான் இந்தப் படத்தை மற்ற மொழிகளில் டப் செய்யவில்லை. காரணம், இந்தப் படம் கேரளாவைச் சேர்ந்த இளைஞனின் உணர்வுபூர்வமான பயணத்தை குறிக்கிறது. எங்களின் முந்தைய படமான ‘ஜன கண மன’ படத்தை நாங்கள் பல்வேறு மொழிகளில் டப் செய்து வெளியிட்டோம். அது நெட்ஃப்ளிக்ஸில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றிருந்தது.

ஆனால், இந்தப் படத்தை பொறுத்தவரை மலையாளம் தவிர்த்து மற்ற மொழிகளில் படத்தை டப் செய்ய வேண்டாம் என முடிவெடுத்துவிட்டோம். ஒரு மலையாளியின் கதையை மலையாளத்திலேயே மக்கள் பார்த்து புரிந்துகொள்ளட்டும் என பேசி முடிவு செய்தோம். அது இன்னும் பார்வையாளர்களுக்கு நெருக்கத்தை கொடுக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE