மீட்கப்படும் நினைவுகள்... - சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘குரங்கு பெடல்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘குரங்கு பெடல்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது 90ஸ் கிட்ஸ்களின் நாஸ்டால்ஜி அனுபவமாக இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘மதுபானக்கடை’, ‘வட்டம்’ படங்களை இயக்கிய கமலக்கண்ணன் அடுத்து இயக்கியுள்ள படம், ‘குரங்கு பெடல்’. ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. காளி வெங்கட், சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

கடந்த 53-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ட்ரெய்லர் எப்படி? - “விளையாட்டு உடல் நலத்தை காக்கும்... விளையாட்டு கொண்டாட்டத்தை தரும்... விளையாட்டு வீட்டுக்கு, நாட்டுக்கு உயிருக்கு நல்லது” என்ற வாசகத்துடன் தொடங்குகிறது ட்ரெய்லர். அதிலும் குறிப்பாக, “விளையாட்டு பீரியடை கணக்கு பீரியடுக்கு மாற்றி தருவது மனித தன்மையற்ற செயல்” என அடுத்த வசனம் அட்டகாசம்!

குச்சி ஐஸ், கோலி விளையாட்டு, நூல் கோர்த்த இருமுனை செல்ஃபோன், வாடகை சைக்கிள், குரங்கு பெடல் என கிராமத்து வெயிலில் சிறுவர்களின் ஆட்டம் 90’களின் நினைவுகளை மீட்டெடுக்கிறது. குரங்கு பெடல் போட்டு சைக்கிள் கற்றுக்கொள்ள போராடும் சிறுவனும், அவரது நண்பர்களின் பந்தயமும் என்ற எளிமையான கதைக்களம் யதார்த்தமாக படமாக்கப்பட்டிருப்பதை ட்ரெய்லரின் காட்சிகள் உணர்த்துகின்றன.

சமீபத்திய படங்களில் வரும் துப்பாக்கி, ரத்தம், கொலை போன்ற வன்முறைகள் இல்லாமல் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படம் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE