திரை விமர்சனம்: ஒரு நொடி

By செய்திப்பிரிவு

மதுரை அலங்காநல்லூரில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் சேகரன் (எம்.எஸ்.பாஸ்கர்) திடீரென காணாமல் போகிறார். தாங்கள் திருப்பி கொடுக்க வேண்டிய கடன் தொகைக்குப் பதிலாக தங்களின் நிலப் பத்திரத்தை அபகரித்துக்கொண்ட கரிமேடு தியாகு (வேல ராமமூர்த்தி) தன் கணவனைக் கடத்தியிருக்கக் கூடும் என்று புகார் அளிக்கிறார் சேகரனின் மனைவி சகுந்தலா (ஸ்ரீரஞ்சனி). சேகரனைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையைக் கையிலெடுக்கிறார் காவல்துறை ஆய்வாளர் பரிதி இளமாறன் (தமன் குமார்).

இதற்கிடையே நகைக்கடையில் பணியாற்றும் பார்வதி (நிகிதா) என்னும் இளம்பெண், மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். பார்வதியைக் கொன்றது யார் என்பதையும் பரிதியும் அவரது குழுவினரும் விசாரிக்கத் தொடங்குகின்றனர். சேகரன் என்ன ஆனார்? பார்வதியைக் கொன்றது யார்? சேகரன் தொலைந்து போனதற்கும் பார்வதி கொலைக்கும் என்ன தொடர்பு? இப்படி பல கேள்விகளுக்கு விடை தருகிறது மீதிக் கதை.

இரண்டு குற்றங்களின் விசாரணையை முன்வைத்து இறுதிவரை யார் குற்றவாளி என்னும் மர்மத்தைத் தக்கவைத்து கிளைமாக்ஸில் மர்மத்தை விலக்கும் பாணியிலான திரைக்கதையைக் கூடுமான வரை சுவாரஸியமாகக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.மணிவர்மன். சந்தேக வலையில் விழும் ஒவ்வொருவரையும் தேடிக் கண்டுபிடிப்பதும் அவர்களிடம் விசாரணை நடத்துவதும் ஒவ்வொருவரிடமிருந்தும் வழக்கு வேறு திசைக்கு நகர்வதுமாகப் பயணிக்கும் திரைக்கதையில் வியக்க வைக்கும் தருணங்கள் எதுவும் இல்லை என்றாலும் பார்வையாளரின் கவனத்தைத் தக்கவைக்கிறது. பரிதி புத்திசாலித்தனமாகவும் நிதானத்துடனும் விசாரணையைக் கையாள்கிறார். சந்தேக நபர்கள் ஒருவேளை தவறு செய்யாதவர்களாக இருக்கலாம் என்கிற கவனத்துடன் இருப்பது முதிர்ச்சியான அணுகுமுறை.

அதே நேரம், 2 குற்றங்கள் குறித்த விசாரணையை ஒரே நேரத்தில் ஒரே குழு மேற்கொள்வதும் அதனால் நிறைய தகவல்களைத் தருவதும் பார்வையாளர்கள் பின் தொடரக் கடினமாக உள்ளன. அதோடு பார்வதியின் கதையில் அளவுக்கதிகமான சென்டிமென்ட், காதல், டூயட் போன்றவை பரபரப்பான த்ரில்லர் திரைக்கதையில் தேவையற்ற வேகத்தடைகள். இதனால் இரண்டாம் பாதி நீளமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

இறுதியில் குற்றவாளி யார் என்பதும் குற்றத்துக்கான காரணம் என்ன என்பதும் தெரியவரும்போது ‘இதற்குத்தான் இவ்வளவு பில்டப்பா?’ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு தவறு செய்துவிட்டு அதை மறைப்பதற்காக மேலும் பல தவறுகளைச் செய்துகொண்டே இருப்பதற்கு பதிலாக உண்மையை ஒப்புக்கொள்வதே மேலானது என்னும் செய்தியை சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால் அது உரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

காவல்துறை அதிகாரியாக தமன் குமார், கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீரஞ்சனி, வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, தீபா சங்கர், கஜராஜ் என தெரிந்த முகங்களோடு பல புதுமுகங்களும் நடித்திருக்கின்றனர். இவர்கள் அனைவருமே கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை பரவாயில்லை. ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கதைக்குத் தேவையானதைத் தந்துள்ளன. மர்மம் நிறைந்த குற்ற விசாரணையை வைத்து பின்னப்பட்ட ‘ஒரு நொடி’ கலவையான உணர்வைத் தருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE