காங்கிரஸில் இணைகிறார் மன்சூர் அலிகான்: செல்வப்பெருந்தகையிடம் நேரில் விருப்பக் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையைச் சந்தித்து விருப்பக் கடிதம் அளித்துள்ளார்.

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் தன்னை ராகுல் காந்தி முன்னிலையில் இணைத்துக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்து அவர் கடிதம் ஒன்றையும் அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கடிதம் கொடுத்திருந்தேன்.

15 ஆண்டுகளுக்கு முன்பாக நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கட்சியிலிருந்து விலகிவிட்டேன். மீண்டும் கட்சியில் இணைவதற்காக கடிதம் கொடுத்திருந்தேன். அந்தக் கடிதம் யாருக்கும் போய் சேரவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான், நான் ஒரு கட்சியை ஆரம்பித்து, மிகவும் கஷ்டப்பட்டு எனது கை காசை செலவழித்து ஒரு தேர்தலை சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன்.

நான் போட்டியிட்ட வேலூர் தொகுதியை தவிர, மற்ற இடங்களில் இண்டியா கூட்டணியை ஆதரிப்பதாகவும், பிரியங்கா காந்தி அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார்கள் என்ற எனது விருப்பத்தை ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட பிரதமர் மோடி நாட்டுக்காக எதையும் செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் எதையாவது பேசி ஒரு குழப்பத்தை உண்டாக்குகிறார்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE