மாயா மச்சீந்திரா: எம்.ஜி. நடராஜ பிள்ளையால் எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வாய்ப்பு

By செ. ஏக்நாத்ராஜ்

பண்டைய இந்தியா மற்றும் திபெத்தின் புகழ்பெற்ற மாயாஜால கதைகளில் ஒன்று, ‘மாயா மச்சீந்திரா’. இந்தக் கதை வெவ்வேறு மொழிகளில் 6 முறை படமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் பேசும்படமான ஆலம் ஆராவுக்கு(1931) பிறகு இந்தி, மராத்தியில் உருவான படம் இது. வி.சாந்தாராம் இயக்கிய இந்தப் படத்தில், மராத்தி சினிமாவின் அப்போதைய டாப் ஹீரோ கோவிந்தராவ் டெம்பே, மச்சீந்திராவாக நடித்தார். அவர் சீடர் கோரக்கராக மாஸ்டர் விநாயக்கும் ராணியாக துர்கா கோடே-வும் நடித்தனர்.

இந்தப் படம் பின்னர் தமிழில் உருவானது. ராஜா சந்திரசேகர் இயக்கினார். இவர், இயக்குநர் டி.ஆர்.ரகுநாத்தின் அண்ணன். இதில், எம்.கே.ராதா, மச்சீந்திரவாக நடித்தார். அவர் சீடர் கோரக்கர் வேடத்தை எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஏற்றிருந்தார். இவர், கர்நாடக இசைக் கலைஞர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் இளைய சகோதரர். இதில் எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம்தான். எம்.ஜி.ராம்சந்தர் என்ற பெயரில் சூரியகேது என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

எம்.பி.ராதாபாய், சாரதா, டி.வி.ஜனகம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.ஜி.சக்கரபாணி, பி.ஜி.வெங்கடேசன், கே.எஸ்.சங்கர ஐயர், டி.எம்.பட்டம்மாள், ராமலட்சுமி, எல்.சந்திரிகா உட்பட பலர் நடித்தனர்.

துறவியான மச்சீந்திரா (எம்.கே.ராதா), தனது சீடன் சங்கநாத்துடன் (என்.எஸ்.கிருஷ்ணன்), ஊர்மிளா தேவி (எம்.பி. ராதாபாய்) ஆளும் நாட்டுக்குச் செல்கிறார். அரசியின் எல்லைக்குள் வந்ததால் கைது செய்யப்படுகிறார்கள். தண்டனையாக, மச்சீந்திரா கழுத்தில் வட்டக்கல்லை மாட்டுகிறார்கள். அரசிக்கும் துறவிக்கும் வார்த்தைப் போர் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அரசிக்குக் கோபம் வர, மச்சீந்திராவை நோக்கி வாளை ஓங்குகிறார். அவர் 'ஜெய் அலக் நிரஞ்சன்' என்ற மந்திரச் சொல்லைக் கூறியதும் பூவாகிறது வாள். வெடித்துச் சிதறுகிறது வட்டக்கல். சடாமுடி நீங்கி சுந்தரராகக் காட்சியளிக்கிறார் மச்சீந்திரா.

அதிர்ச்சியடையும் அரசி, தன்னை மன்னித்து, மனைவியாக ஏற்க வேண்டும் என்கிறார். மறுக்கிறார் மச்சீந்திரா. இதற்கிடையே தன் அண்ணன் மரணத்துக்குப் பழி வாங்க படையோடு வருகிறார் சூரியகேது (எம்.ஜி.ஆர்). பிறகு என்ன நடக்கிறது என்று கதை போகும். இந்தப் படத்தில் சூரியகேது கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமானவர் எம்.ஜி.நடராஜ பிள்ளை. இவர், சதிசுலோச்சனா, மகாபாரதம், தட்சயஞ்ஞம் படங்களில் நடித்தவர். கதையில், இவர் சகோதரர் விசாலாட்ச மகாராஜா என்ற கேரக்டரில் நடிக்கத்தான் எம்.ஜி.ஆர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது சிறிய கதாபாத்திரம். ஒரே ஒரு காட்சிதான் வரும். ஆனால், கொல்கத்தாவில் ஷூட்டிங் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நடராஜபிள்ளை திடீரென இறந்துவிட்டார். பிறகு அவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை எம்.ஜி.ஆருக்கு கொடுத்தார்கள். இது வில்லத்தனமான வேடம். இருந்தாலும் இதில் எம்.ஜி.ஆர் இரண்டு கைகளாலும் வாள் சுழற்றும் காட்சிகள் அப்போது ரசிக்கப்பட்டன.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் அலக் நிரஞ்சன்’ மக்கள் மனதில் இடம் பிடித்தது. மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு பாபநாசம் சிவன் இசை அமைத்தார். சி.ஏ.லட்சுமணதாஸ் பாடல்களை எழுதினார். அப்போது சுமாரான வெற்றியை பெற்ற இந்தப் படம் 1939-ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது. இந்தப் படம் தெலுங்கில் 1945-ம் ஆண்டு பி.புல்லையா இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE