“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!” - சிவகார்த்திகேயன் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: “கண்டிப்பாக அனைவரும் போய் வாக்களிக்க வேண்டும். அது நம் கடமை. உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்கு நம் உரிமை என்பது போல வாக்களிப்பது நம்முடைய கடமை. முதல்முறை வாக்களிக்கப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள். நீங்கள் அதுகுறித்து உங்கள் வீட்டில் கூட ஆலோசிக்க வேண்டியதில்லை. உங்களுக்கு யாரை பிடிக்கிறதோ, அவர்களுக்கு வாக்களியுங்கள். ஆபிரகாம் லிங்கன் சொன்னது போல, ஒரு புல்லட்டை விட வலிமையானது நம் வாக்கு. எனவே அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

கண்டிப்பாக அனைவரும் போய் வாக்களிக்க வேண்டும். அதுதான் நம் கடமை. ஆட்சி குறித்த நம்முடைய கருத்துகளை எடுத்து வைப்பதற்கு முன்பு நாம் முதலில் ஓட்டு போட்டிருக்க வேண்டும். அதைத்தான் நான் என்னுடைய ரசிகளுக்கும் சொல்ல விரும்புகிறேன்.

தேர்தல் ஆணையம் மிக அழகான முறையில் ஒருங்கிணைப்பு செய்திருக்கிறார்கள். அதிகபட்சம் 15 நிமிடம்தான் வாக்களிக்க ஆகிறது. அதுமட்டுமின்றி இன்று அனைத்து நிறுவனங்களும் விடுமுறை அளித்துள்ளனர். எனவே அனைவரும் சென்று வாக்களிக்க வேண்டும்” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் மற்றும் அரசியல், திரை பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE