சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு?

By செய்திப்பிரிவு

மும்பை: சல்மான் கான் வீட்டருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்புள்ளது தெரியவந்துள்ளது.

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 4.55 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், சல்மான் கான் வீட்டின் வெளியே துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து மும்பை போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். பைக்கில் வந்த மர்ம நபர்கள் 3 ரவுண்ட் துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டறிந்துள்ள போலீஸார், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிசிடிவியில் சிக்கிய இருவரும் ஹரியாணாவின் குருகிராமில் இருந்து வந்தவர்கள் என்றும், அவர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. விஷால் என அடையாளம் காணப்பட்ட நபர்களில் ஒருவர், பிஷ்னோய் கும்பல் உறுப்பினர் ரோஹித் கோதாராவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

குருகிராமில் உள்ள தொழிலதிபர் சச்சின் முன்ஜால் மார்ச் மாதம் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதே விஷால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். சல்மான் கான் இல்ல துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் இது டிரெய்லர் தான் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

பழிவாங்கும் சதி பின்னணி? 1998-ம் ஆண்டு, ஜோத்பூரில், அரியவகை மான் ஒன்றை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அவர் இப்போது ஜாமீனில் இருக்கிறார். அந்த மான், தங்கள் சமூகத்தின் புனித விலங்கு என்பதால் அதற்குப் பழிவாங்கும் வகையில் சல்மான் கானை கொல்வோம் என்று பஞ்சாப்பை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். பிஷ்னோய் குழுவில் ஒருவரான கோல்டி ப்ரார், கடந்த வருடம் பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE