நடப்பவை எல்லாம் நன்மைக்கே - முடிவுக்கு வந்த விஷ்ணு விஷால் - சூரி பிரச்சினை!

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த சில ஆண்டுகளாக நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் சூரி இடையில் நில மோசடி தொடர்பான பிரச்சினை நீடித்துவந்த நிலையில், தற்போது இருவரும் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை சிறுசேரியில் ஒரு நிலம் வாங்கிய விவகாரத்தில் தன்னுடைய ரூ.2.7 கோடி பணத்தை மோசடி செய்துவிட்டதாக ஓய்வுபெற்ற டிஜிபியும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மீது நடிகர் சூரி காவல்துறையில் புகாரளித்திருந்தார்.

பின்னர் இந்த புகாரில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறி, சூரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தை நாடினார். இதையடுத்து ரமேஷ் குடவாலா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இது தொடர்பாக சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் எக்ஸ் சமூகவலைதளத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தனர். அதன்பிறகு இருவரும் சேர்ந்து படம் நடிப்பதை தவிர்த்தனர்.

இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 09) நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் சூரி, தனது தந்தை ரமேஷ் குடவாலா உடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், “எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில்.. நேர்மறை எண்ணங்களை பரப்புவோம் சூரி அண்ணா” என்று பதிவிட்டுள்ளார்.

விஷ்ணு விஷாலின் இந்த பதிவை பகிர்ந்துள்ள சூரி, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே.. நன்றிங்க” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இதய எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக விஷ்ணு விஷால் - சூரி இடையே நிலவிவந்த பிரச்சினைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விஷ்ணு விஷால் நடித்த முதல் படமான ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடியின் மூலமாகத்தான் சூரி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடித்த பல படங்களில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் வரவேற்பை பெற்றன. குறிப்பாக ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் காமெடி காட்சிகள் பெருமளவில் பேசப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE