“வாக்குக்கு பணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆனால்...” - விஜய் ஆண்டனி கருத்து

By செய்திப்பிரிவு

கோவை: “ஓட்டுக்கு பணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்தான். ஆனால், வறுமையில் இருக்கிறீர்கள், பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட பணமில்லை எனும்போது சூழ்நிலை கருதி நீங்கள் பணத்தை வாங்கி கொள்ளலாம். ஆனால், வாக்களிக்கும்போது பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என நினைக்காதீர்கள்” என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் புதிய படம் ‘ரோமியோ’. இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். மிருணாளினி ரவி நாயகியாக நடித்துள்ள இப்படம் வரும் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.

அப்போது பேசிய விஜய் ஆண்டனி, “ரோமியோ படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ஒவ்வொரு கணவனும் இப்படத்துக்கு மனைவியை அழைத்து வர வேண்டும். திருமணத்துக்குப் பிறகு கணவன் - மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை இப்படம் பேசுகிறது” என்றார்.

‘வாக்குக்கு பணம்’ குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “ஓட்டுக்கு பணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்தான். ஆனால், வறுமையில் இருக்கிறீர்கள், பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட பணமில்லை எனும்போது சூழ்நிலை கருதி நீங்கள் பணத்தை வாங்கி கொள்ளலாம். ஆனால், வாக்களிக்கும்போது பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என நினைக்காதீர்கள்.நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்.

உங்கள் பணத்தையே அவர்கள் திருப்பி தருகிறார்கள். அதை வாங்குவதில் தவறில்லை. பணம் வாங்கிவிட்டோமே என்பதால் நீங்கள் தவறு செய்பவர்களுக்கு திரும்ப திரும்ப வாக்களிக்க அவசியமில்லை. உங்கள் பணம் உங்களிடம் வருகிறது என நினைத்துக்கொள்ளுங்கள். வாக்கை மட்டும் சரியானவர்களுக்கு செலுத்துங்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE