“என்னையும் சில அரசியல் கட்சிகள் அணுகின” - இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி ஓபன் டாக்

By செய்திப்பிரிவு

மும்பை: “திரையுலக பிரபலங்கள் அரசியலிலும், தேர்தலிலும் ஈடுபடுவது புதிதல்ல. அரசியல் கட்சிகளும் பிரபலங்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன. எதிர்கட்சிகள் சிலர் அரசியலுக்காக என்னை அணுகின. ஆனால், நான் கதைசொல்லியாக இருக்கவே விரும்புகிறேன்” என ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “அரசியல் சார்ந்த படங்களை நாம் இப்போதுதான் திடீரென்று இயக்கி வருகிறோம் என சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக - அரசியல் திரைப்படங்களை உருவாக்கிய வரலாறு நமக்கு உண்டு. ஒவ்வொரு இயக்குநரும், ராஜ் கபூர், தேவ் ஆனந்த் போன்றோரும் கூட தங்களுடைய அரசியல் நிலைபாட்டை வைத்து அரசியல் படங்களை எடுத்துள்ளனர். ஆனால், அதில் ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவை பெரும்பாலும் வணிகச் சூழலில் இருந்தன.

தொடர்ந்து, மிருணாள் சென் திரைப்படங்கள், சத்யஜித் ரேயின் படங்கள், ஷ்யாம் பெனகலின் படங்கள், இதனை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்றன. அரசியல் படங்கள் தேவை. ஏனென்றால் நாம் வாழ்க்கையை அரசியலைச் சுற்றி தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, அரசியல் இல்லாமல் படங்களை இயக்க முடியாது” என்றார்.

கங்கனா ரணாவத், அருண் கோவில் என நடிகர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, “அரசியல் கட்சிகள் எப்போதுமே திரையுலகப் பிரமுகர்களையும், பிரபலங்களையும், சில சமயங்களில் கிரிக்கெட் வீரர்களையும், சில சமயங்களில் மத குருக்களையும் களமிறக்குகின்றன. பிரபலமானவர்களை களமிறக்கினால் வாக்கு எண்ணிக்க அதிகரிக்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.

பொதுவாகவே திரையுலக பிரபலங்கள் தேர்தலில் வெற்றிபெறுவதும் உண்டு. சத்ருகன் சின்ஹா, ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன், சமீபத்தில் ஹேமமாலினி, தர்மேந்திரா, சன்னி தியோல், வினோத் கண்ணா என பலரும் தேர்தலில் குதித்தவர்கள் தான். ஏராளமான திரையுலகினர் தீவிர அரசியலிலும், தேர்தலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆகவே, இது புதிதல்ல. இங்கே பிரபலத்துக்குதான் முன்னுரிமை. நடிப்பு கூட இரண்டாவது தான். அவர் பிரபலமானவராக இருந்தால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

என்னையும் சில அரசியல் கட்சிகள் அணுகின. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் எதிர்கட்சிகள் என்னை அணுகின. ஆனால், நான் அரசியலில் ஈடுபடுவதை விட கதைசொல்லியாக இருப்பதையே விரும்புகிறேன். எனது அரசியலைப் பற்றி வேறு யாரும் கருத்து தெரிவிக்கவோ, திரைப்படம் எடுப்பதையோ நான் விரும்பவில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE