ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?

By குமார் துரைக்கண்ணு

கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை.

மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது.

“எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது.

படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.

இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது.

பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது.

பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது.

விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும்.

அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE