‘லொள்ளு சபா’ சேஷு - திரையில் அட்டகாச நடிகர், நிஜத்தில் அற்புத மனிதர் | புகழஞ்சலி பகிர்வு

By செய்திப்பிரிவு

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 60. அவரின் திரையுலக பயணம் குறித்த விரைவுப் பார்வை இது.

“நான் யாருன்னு என்ன கேக்குறத விட, வேற யார்கிட்டயாவது போய் அவர் யாருன்னு கேட்டு பாரு... அச்சச்சோ அவரா, பயங்கரமான ஆளாச்சே, அப்டின்னு சொல்லுவா” என ‘ஏ1’ படத்தில் சேஷு பேசிய வசனம் இன்றைய 2கே கிட்ஸ் தலைமுறைக்கும் அவரை கொண்டு சேர்த்தது. அதிலும் அந்த வாழைப்பழத்தை கத்தியாக பயன்படுத்தும் காமெடி அல்டிமேட் ரகம். போலவே, “கொசுக்கடியில்லாம தூங்குங்க அத்திம்பேர்” என மொத்தப் படத்திலும் நகைச்சுவையில் மிரட்டியிருப்பார் சேஷு. குறிப்பாக அண்மையில் அவர் நடித்த சில கதாபாத்திரங்கள் ரசிகர்களின் ஃபேவரைட்.

விஜய் டிவியில் கடந்த 2003 - 2008 வரை ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’வின் மூலம் நடிகராக முத்திரை பதித்தவர் சேஷு. குறிப்பாக ‘மண் வாசனை’ படத்தை ‘மசாலா வாசனை’ என்ற பெயரில் ‘லொள்ளு சபா’வில் ஸ்பூஃப் செய்திருந்தனர். அதில் வயதான பாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சேஷு, “மண்ணென்ன வேப்பன்ன வெளக்கெண்ண யார் ஜெயிச்சா எனக்கென்ன”, “பொட்டுக்கடல, வேர்கடல, நிலக்கடல நீ சொன்னதுக்கு சிரிப்பே வரல” போன்ற வசனங்களின் மாடுலேஷன் இன்றும் இன்ஸ்டா ரீல்ஸ்களில் ட்ரெண்டிங். அதேபோல ரஜினியின் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தின் ஸ்பூஃப் வீடியோவில், தம்பி கதாபாத்திரத்தின் கெட்டப்பில் ரசிக்க வைத்திருப்பார்.

‘லொள்ளு சபா’வைத் தொடர்ந்து ‘வீராப்பு’, ‘வேலாயுதம்’ என பல படங்களில் நடித்தாலும், சந்தானத்தின் படங்களிலே அவரது கதாபாத்திரங்கள் கவனம் பெற்றன. குறிப்பாக ‘ஏ1’, ‘பாரிஸ் ஜெயராஜ்’, ‘குலு குலு’, ‘டிக்கிலோனா’, ‘வடக்குப் பட்டி ராமசாமி’, படங்கள் அவரை தனித்துக் காட்டின. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நேர்த்தியாகவும், தனக்கே உரிய மாடுலேஷனில் கச்சிதமாக வெளிப்படுத்துவதில் சேஷு கவனிக்க வைப்பவர். சிறிய நேரம் என்றாலும், அவர் வந்து செல்லும் காட்சியில் முத்திரைப் பதிப்பார்.

உதவும் மனம்: கடந்த மாதம் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “இதுவரைக்கு 10 ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன். நான் சிறுவயதில் அவ்வளவு கஷ்டப்பட்டேன். என்னுடைய அக்கா திருமணத்துக்கு அம்மா அவ்வளவு கஷ்டப்பட்டார். இன்றைக்கு யாராவது கஷ்டபடுபவர்களை பார்த்தால் எனக்கு அந்த வலி புரியும்.

கால் அசைக்க முடியாமல் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உதவி கேட்டிருந்தார். அவருக்கு அண்மையில் நண்பரின் மூலம் உதவி செய்திருந்தேன். அதற்கு உதவியர்களுக்கு இங்கே நன்றி சொல்லிக்கொள்கிறேன்” என்றார்.

மிக்ஜாம் புயலில் சேஷு வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. தன்னுடைய குடும்பத்தையும் தாண்டி ஏரியாவில் உள்ள மற்ற குடும்பங்களுக்கு அந்த நேரத்தில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு உதவியுள்ளார். அப்போது ‘குக் வித் கோமாளி’ பாலா உதவிகரமாக இருந்ததை நினைவூட்டியிருந்தார்.

மற்றொரு பேட்டியில், “நான் ஒரு ஹார்ட் பேஷன். ஒரு பக்கெட் தண்ணீர் கூட தூக்கக் கூடாது என மருத்துவர் தெரிவித்திருந்தார். மழை வெள்ளத்தின்போது, அரிசியை கொண்டு போய் கொடுத்தால் மக்கள் சாப்பிடுவார்களே என ஐந்து, ஐந்து கிலோவாக அரிசி மூட்டைகளை சுமந்து சென்று கொடுத்தேன்” என கூறியிருந்தார்.

உண்மையில் காலம் மிகவும் கொடுமையானது என்பது சேஷுவின் இல்லாமையிலும் உணர முடியும். பல ஆண்டுகளாக சிறு சிறு கதாபாத்திரங்கள் முகம் காட்டியபடி, ஒரு துணை நடிகராக காலத்தை ஓட்டி வந்தவருக்கு சமீப காலத்தில்தான் கவனத்துக்குரிய நகைச்சுவை நடிகர் என்ற அந்தஸ்தும், அதற்குரிய வெகுமானமும் கிட்டியது. இந்தச் சூழலில் அவரது மறைவு துயரத்தை மென்மேலும் கூட்டவல்லது.

திரையிலும், திரைக்குப் பின்னாலும் நகைச்சுவை கலைஞராக, நல்ல மனிதராக வலம் வந்த சேஷு இன்று இல்லை. இருப்பினும் அவரின் படைப்பும், அவர் செய்த உதவிகளும் என்றும் காலத்தால் நினைவுகூரப்பட்டுக் கொண்டேயிருக்கும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE