‘ஆடு ஜீவிதம்’ படத்துக்காக 16 வருடம் காத்திருப்பு: இயக்குநர் ப்ளெஸ்ஸி குறித்து பிருத்விராஜ் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: ‘ஆடு ஜீவிதம்’ படத்துக்காக இயக்குநர் ப்ளெஸ்ஸி 16 ஆண்டுகாலம் காத்திருந்தது குறித்து நடிகர் பிருத்விராஜ் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடு ஜீவிதம்’. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்தின் ஒலிக் கலவையை ரசூல் பூக்குட்டி கவனித்துள்ளார். படம் வரும் மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (மார்ச் 19) சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் பிருத்விராஜ், “இந்தப் படம் கிட்டத்தட்ட 16 வருடப் பயணம். 2008ல் இயக்குநர் ப்ளெஸ்ஸி என்னிடம் வந்து, ‘நஜீப் கேரக்டரில் நீங்கள்தான் நடிக்க வேண்டும்’ எனக் கூறினார். மோகன்லால், மம்முட்டி என மலையாளத்தில் பெரிய ஸ்டார்கள் எல்லோரும் ப்ளெஸ்ஸியுடன் ஒரு படமாவது செய்து விட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படியான முன்னணி இயக்குநர்தான் ப்ளெஸ்ஸி.

அவர் இந்த ஒரு படத்துககாக 16 வருடம் செலவிட்டது என்பது அவருடைய அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. 2009ல் இந்தப் படம் செய்யலாம் என முடிவெடுத்து, அதன்பிறகு படப்பிடிப்புக்கு செல்லவே பத்து வருடங்கள் ஆனது. ஏனெனில், மலையாள சினிமாவில் அதற்கான கேமரா, இன்னும் சில விஷயங்கள் அப்போது சாத்தியமே இல்லை.

மூன்று, நான்கு வருடங்கள் பாலைவனத்தில் சிக்கிய ஒருவரின் வாழ்க்கையை இந்த கதை கூறுகிறது. அப்படி இருக்கும் பொழுது படத்தின் ஆரம்பத்தில் நன்றாக எடை கூடினேன். கேரளாவில் படப்பிடிப்பு முடித்த பின்பு ஏழெட்டு மாதங்கள் படப்பிடிப்பை நிறுத்தி விட்டார்கள்.

அந்த காலகட்டத்தில் எனக்கு உடல் எடை குறைய ப்ளெஸ்ஸி அவகாசம் கொடுத்தார். பின்பு 2020ல் ஜோர்டான் சென்று படப்பிடிப்பு தொடங்கினோம். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே, கரோனா வந்ததால் மூன்று மாதங்கள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் மொத்த குழுவும் அங்கேயே சிக்கிவிட்டோம். அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்குமா, இந்தப் படம் இனி நடக்குமா என எதுவுமே தெரியவில்லை.

இந்தப் படத்துக்கு நான் சம்மதம் சொன்ன 2008 ஆண்டில் எனக்கு திருமணம் ஆகவில்லை, தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று எந்த முகமும் அப்போது எனக்கு இல்லை. இத்தனை வருட பயணத்தில் எனக்கு இன்னொரு முகமாக இந்தப் படம் இருக்கிறது. சினிமாவுக்கு குறிப்பாக மலையாள சினிமாவுக்கு இப்போது நல்ல காலகட்டம். இது போன்ற சமயத்தில் எங்கள் படம் வருவது மகிழ்ச்சி. இந்த படம் நஜீப் என்ற மனிதனின் போராட்டத்தையும் அவரது தன்னம்பிக்கையும், அவரை போல இருக்கக்கூடிய பலருக்குமான அர்ப்பணிப்பு” என்று பிருதிவிராஜ் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE