ஜப்பானில் வெளியாகும் ‘ஒப்பன்ஹெய்மர்’ போஸ்டரில் மாற்றம் செய்த படக்குழு!

By செய்திப்பிரிவு

டோக்யோ: கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் வரும் மார்ச் 29-ஆம் தேதியன்று ஜப்பானில் வெளியாக உள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘ஒப்பன்ஹெய்மர்’. அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் வாழ்க்கையைக் கதைக்களமாக கொண்டு உருவான இப்படம் கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் சிலியன் மர்பி நடித்திருந்தார். இப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்கம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை குவித்தது.

இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டாலும் ஜப்பானில் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், இப்படம் ஏறக்குறைய 8 மாதங்களுக்குப் பிறகு ஜப்பான் நாட்டில் வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ போஸ்டர் ஒன்றில், படத்தின் நாயகன் சிலியன் மர்ஃபிக்கு பின்னால் டவர் ஒன்று இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு முன்னால் வெளியான அசல் போஸ்டர்களில் நாயகனுக்கு பின்னால் அணுகுண்டு இருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அது, ஜப்பான் மக்களின் உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படும் என்பதாலேயே போஸ்டரில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படம் ஜப்பானில் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE