ஆக்‌ஷன் ஜெய்சங்கரை அதிலிருந்து மாற்றிய ‘நூற்றுக்கு நூறு’

By செய்திப்பிரிவு

ஆக்‌ஷன் படங்களில், துப்பாக்கி தோட்டாவுடன் நடித்துக் கொண்டிருந்த ‘தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்சங்கரை வேறுமாதிரி காட்டிய படம், கே.பாலசந்தரின் ‘நூற்றுக்குநூறு’.

இதில், ஸ்ரீவித்யா, நாகேஷ், லட்சுமி, கே.ஆர்.விஜயா, விஜயலலிதா, ஜெயக்குமாரி, வி.கோபாலகிருஷ்ணன், வி.எஸ்.ராகவன், ஒய்.ஜி.மகேந்திரன், ஆர்.எஸ்.மனோகர், ஸ்ரீகாந்த், ஜெமினி கணேசன், வி.கோபாலகிருஷ்ணன் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம்.

என்.பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு கே.பாலசந்தரின் ஆஸ்தான இசை அமைப்பாளர் வி.குமார் இசை அமைத்தார். பாடல்களை வாலி எழுதினார்.

இதில் இடம்பெற்ற ‘நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்’ பாடல் எவர்கிரீன் ஹிட். இப்போதும் பலரின் விருப்ப லிஸ்ட்டில் விடாமல் இடம்பெற்றிருக்கிறது இந்தப்பாடல்.

நேர்மையான கல்லூரி பேராசிரியர் ஜெய்சங்கருக்கு லட்சுமியுடன் திருமண ஏற்பாடுகள் நடக்கும்போது அவருக்கு எதிராக, பாலியல் புகார் வருகிறது.

ஒரு கட்டத்தில் ஜெய்சங்கர் கைது செய்யப்பட, தான் நிரபராதி என்று நிரூபித்து எப்படி அதிலிருந்து வெளிவருகிறார் என்பது கதை. கிளைமாக்ஸில் வழக்கம்போல குடும்பத்துக்கான அட்வைஸும் உண்டு.

த்ரில்லர் பாணியில் படத்தை உருவாக்கி இருப்பார் பாலசந்தர். திரைக்கதையும் வசனங்களும் பேசப்பட்டன. வழக்கமாக நடனக் காட்சிகளில் மட்டும் நடிக்கும் விஜயலலிதாவுக்கு இதில் முக்கியமான கேரக்டர்.

ஸ்ரீவித்யாவுக்கு நெகட்டிவ் கேரக்டர் போலதான். வி.எஸ்.ராகவன் ஆங்கிலோ இந்தியராக நடிப்பில் பிரம்மாதப்படுத்தி இருப்பார். இந்தப் படம் ஹிட்டானது.

1971-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம், இந்தியில் வினோத் கன்னா நடிப்பில் ‘இம்திஹான்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE