Kung Fu Panda 4 Review: கலகலப்பான ‘அதிரடி’ அனிமேஷன் விருந்து!

By சல்மான்

2008ஆம் ஆண்டு வெளியான ‘குங்ஃபூ பாண்டா’ படவரிசையில் நான்காம் பாகமாக வெளியாகியுள்ளது ‘குங்ஃபூ பாண்டா 4’. டிராகன் வாரியர் என்று அழைக்கப்படும் பாண்டா கரடி மற்றும் நண்பர்களின் குங்ஃபூ சாகசங்கள், குபீர் சிரிப்பை வரவழைக்கும் நகைச்சுவை வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை இவை அனைத்தும்தான் இப்படங்களின் பொதுவான அம்சங்கள் ஆகும். அதை சற்றும் குறையாமல் நான்காம் பாகத்திலும் தக்க வைத்துள்ளது ‘குங்ஃபூ பாண்டா 4’ படக்குழு.

வழக்கம்போல டிராகன் வாரியராக இருந்து ஊர் மக்களுக்கு உதவி செய்து வருகிறார் பாண்டா கரடி ‘போ’ (ஜாக் பிளாக்). மக்களின் அன்பை பெற்றவராக திகழும் பாண்டாவிடம் அவரின் குருவான மாஸ்டர் ஷிஃபு (டஸ்டின் ஹாஃப்மேன்), புதிய டிராகன் வாரியரை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக சொல்கிறார்.

மாஸ்டரின் முடிவில் விருப்பமில்லாத பாண்டா, முதல் பாகத்தின் வில்லனான டை-லங் மீண்டும் ஒரு கிராமத்தில் அட்டகாசம் செய்வதாக கேள்விப்பட்டு அங்கு செல்ல விரும்புகிறார். இந்த சூழலில், பாண்டாவுக்கு அறிமுகமாகும் ஷென் (ஆக்வாஃபினா) என்னும் நரி ஒன்று, டை-லங் ரூபத்தில் வந்திருப்பது, கமீலியன் என்னும் உருமாறும் சக்தி கொண்ட பச்சோந்தி என்றும், அதனை தடுக்க வேண்டிய அவசியத்தையும் கூறுகிறது. ஷென்னை அழைத்துக் கொண்டு பயணம் மேற்கொள்ளும் பாண்டா, கமீலியனை தடுத்தாரா என்பதுதான் ‘குங்ஃபூ பாண்டா 4’ன் மீதிக்கதை.

‘குங்ஃபூ பாண்டா 4’ படவரிசையில் சுமாரான படம் என்றால் இதற்கு முன்னால் வெளியான மூன்றாம் பாகத்தை சொல்லலாம். அப்பா - அம்மா சென்டிமெண்ட், பாண்டா கிராமம் என எங்கெங்கோ சுற்றும் அந்த கதை பெரியளவில் ஈர்க்கவில்லை. அப்படம் வெளியாகி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு விட்டதை பிடிக்கும் வகையில் கலகலப்பான காட்சிகள் + அதிரடி ஆக்‌ஷனுடன் சிறப்பான திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் மைக் மிச்செல்.

படத்தின் பலமே ஒவ்வொரு காட்சியிலும் இழையோடும் ‘குபீர்’ நகைச்சுவைகளும், புத்திசாலித்தனமாக வசனங்களும்தான். மற்ற அனிமேஷன் படங்களில் இருந்து ‘குங்ஃபூ பாண்டா’ படவரிசையை வித்தியாசப்படுத்தும் இந்த அம்சனக்கள், இந்த படத்தில் சற்று தூக்கலாகவே இருக்கின்றன என்று சொல்லலாம். படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் ‘ஷார்ப்’ ஆன திரைக்கதை இறுதி வரை நம் கவனத்தை எங்கும் சிதற விடுவதில்லை.

வழக்கம் போல பாண்டா/டிராகன் வாரியராக ஜாக் பிளாக். தனது தனித்துவமான குரலாலும், உச்சரிப்பாலும் பாண்டா கதாபாத்திரத்துக்கு படம் முழுக்க உயிரூட்டுகிறார். ’இன்னர் பீஸ் - டின்னர் ப்ளீஸ்’ உள்ளிட்ட அவர் அடிக்கும் ஒன்லைனர் அனைத்துக்கும் அரங்கத்தில் சிரிப்பலை. ஷென் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்வாஃபினா ‘குங்ஃபூ பாண்டா’ உலகத்துக்கு புதுவரவு. ஏற்கெனவே ‘ஜூமான்ஜி 2’, ‘மார்வெல்: ஷான்- சி’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இதில் தன்னுடைய குரலால் கவர்கிறார். போன படங்களில் இடம்பெற்ற டைக்ரெஸ் (ஏஞ்சலினா ஜோலி), மங்கி (ஜாக்கி சான்) உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு இதில் வேலையில்லை. எனினும் கடைசி காட்சியில் அவை என்ட்ரி கொடுக்கும்போது அரங்கம் அதிர்கிறது.

கிராபிக்ஸ் காட்சிகள் குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகள் கண்களின் ஒற்றிக் கொள்ளும் அளவுக்கு நேர்த்தி. வண்ணமயமான கட்டிடங்கள், கலர்ஃபுல் சீன பின்னணி என வழக்கம்போல குங்ஃபூ பாண்டா டச் படம் முழுக்க தெரிகிறது. ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் ஜான் பவலின் பின்னணி இசை மென் காட்சிகளில் ரம்மியமாகவும், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியாகவும் ஈர்க்கிறது.

படத்தில் ஏராளமான புதிய கதாபாத்திரங்கள் அறிமுகமாகியிருந்தாலும், வாயில் மீனை வைத்துக் கொண்டு பேசும் பெலிகன் பறவையும், ஜூனிபர் சிட்டியில் வரும் மூன்று குட்டி முயல்களும் ரசிக்க வைக்கின்றன. இரண்டாம் பாதியில் மலை உச்சிக்கு மேல் ஆடிக் கொண்டிருக்கும் ஒரு உணகவம் தொடர்பாக வரும் காட்சிகள் குபீர் சிரிப்புக்கு உத்தரவாதம்.

படத்தின் குறை என்று பார்த்தால் கிளைமாக்ஸுக்கு முன்னால் வரும் உப்புசப்பில்லாத அந்த ட்விஸ்ட். காலம் காலமாக ஹாலிவுட் படங்களில் குறிப்பாக அனிமேஷன் படங்களில் வரும் அதே துரோக ‘கான்செப்ட்’ பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மொத்தத்தில், அனிமேஷன் பட விரும்பிகளுக்கு இப்படம் நிச்சயம் ஒரு விருந்து என்று தாராளமாக சொல்லலாம். வழக்கமான ஹாலிவுட் அனிமேஷன் டெம்ப்ளேட் கதையில், விறுவிறுப்பான திரைக்கதையுடன் புத்திசாலித்தனமான காட்சிகள், நகைச்சுவை வசனங்களை சேர்த்து சுடச்சுட பரிமாறுகிறது ‘குங்ஃபூ பாண்டா 4’. படம் திரையரங்குகளில் தமிழ் டப்பிங்கிலும் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE