19.5 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஆஸ்கர் விருது நிகழ்வு: சமூக வலைதளங்களிலும் முதலிடம்

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த மார்ச் 10 அன்று நடைபெற்ற ஆஸ்கர் விருது நிகழ்வை சுமார் 19.5 மில்லியன் பேர் கண்டு ரசித்துள்ளனர். இது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அதிக பார்வைகள் என்று கூறப்படுகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த மார்ச் 10ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் ஏழு விருதுகளை அள்ளிக் குவித்தது.

இந்த விருது நிகழ்வு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஏபிசி (அமெரிக்கன் ப்ராட்கேஸ்டிங் கம்பெனி) ஆகிய தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை உலகம் முழுவதும் சுமார் 19.5 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிக்க >> ஆஸ்கர் விருதுகள் ஹைலைட்ஸ்

இது கடந்த ஆண்டு எண்ணிக்கையான 18.8 மில்லியன் பார்வைகளை விட 4 சதவீதம் அதிகம். சமூக வலைதளங்களிலும் ஆஸ்கர் குறித்த பதிவுகள் சுமார் 28.5 மில்லியன் தொடர்புகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளன. #Oscar என்ற ஹாஷ்டேக் அமெரிக்காவில் டாப் ட்ரெண்டிங்கிலும், உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹாஷ்டேகுகளில் முதலிடம் பிடித்துள்ளதாகவும் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா பரவல் காரணமாக மிகவும் குறைவான பார்வைகளை (10.5 மில்லியன்) பெற்ற ஆஸ்கர் விருது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதிகபட்ச பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE