ஜப்பானில் ஒரே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த ‘ஆர்ஆர்ஆர்’ டிக்கெட்டுகள்!

By செய்திப்பிரிவு

டோக்யோ: ஜப்பானில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வரும் 18ஆம் தேதி திரையிடப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கிய ஒரு நிமிடத்துக்குள்ளாகவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வரும் 18 ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்யோவில் அமைந்து ஷின்ஜுகு வால்ட் 9 மற்றும் ஷின்ஜுகு பிக்காடில்லி ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்த நிகழ்வில் இயக்குநர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்வையாளர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

இந்த சிறப்பு திரையிடலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று (மார்ச் 13) தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஒரு நிமிடத்துக்குள்ளாகவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

இது குறித்து ஜப்பான் ரசிகர் ஒருவர் பகிர்ந்திருந்த எக்ஸ் பதிவை ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவினர் ரீபோஸ்ட் செய்துள்ளனர். அதில், “ஜப்பானின் ரிலீஸாகி ஏறக்குறைய 1.5 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்று முதல் இன்று வரை திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. எனினும் மார்ச் 18ஆம் தேதி காட்சிக்கான டிக்கெட்டுகள் ஒரு நிமிடத்துக்குள் விற்றுத் தீர்ந்துள்ளன” என்று அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘ஆர்ஆர்ஆர்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இதில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை வென்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE