தமிழக திரையரங்குகளில் இந்த வாரம் ஆதிக்கம் செலுத்தும் படங்கள் எவை?

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக திரையரங்குகளில் மலையாள படங்களுக்கான வரவேற்பு வார இறுதி நாட்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகியும் அதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டாத சூழல் நிலவுகிறது.

தேர்வுகள், தேர்தல் என சொல்லி தமிழில் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த வார வெளியீட்டை பொறுத்தவரை தமிழில் ஊர்வசியின் ‘J.பேபி’, ஹன்சிகாவின் ‘கார்டியன்’, சார்லியின் ‘அரிமாப்பட்டி சக்திவேல்’, ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

இதில் ‘J.பேபி’ படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையிலும் அதற்கான காட்சிகள் என்பது திரையரங்குகளில் குறைவாகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல மேற்கண்ட தமிழ் படங்களுக்கும் காட்சிகள் மிக குறைவுதான். இதை ஒப்பிடுகையில், இந்தியில் வெளியாகியுள்ள அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் நடித்துள்ள ‘சைத்தான்’ படத்துக்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான வரவேற்பும் மல்டிப்ளக்ஸ் திரையரங்குளில் நன்றாகவே உள்ளது.

மலையாள சினிமா வரவேற்பு: இது தவிர்த்து ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்துக்கான டிக்கெட் புக்கிங்கை பார்க்கும்போது, தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, அதன் முன்பதிவும் அதிகரித்துள்ளது. ஏராளமான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்.

அதேபோல, ‘பிரேமலு’ மலையாள படத்துக்கு குறைந்த காட்சிகள் ஒதுக்கப்பட்டபோதும், அவற்றுக்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது. ஒதுக்கப்பட்ட காட்சிகளில் பெரும்பாலும் நிரம்பியுள்ளன. ஆனால், இந்த வாரம் வெளியான திலீப்பின் ‘தங்கமணி’ திரைப்படம் காற்று வாங்குகிறது. இது தவிர்த்து ரீ-ரிலீஸ் படங்கள் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பாக்ஸ் ஆஃபீஸ்: தமிழகத்தில் மட்டும் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் ரூ.25 கோடியை வசூலித்துள்ளது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் ரூ.130 கோடியை வசூலித்துள்ளது. படம் மலையாளத்தின் அதிகபட்ச வசூலான ‘2018’ படத்தின் ரூ.170 கோடியை நெருங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இம்மாதம் பெரிய அளவில் தமிழ் பட ரிலீஸ் இல்லாத சூழலில், எதிர்வரும் நாட்களில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மட்டும் ஆதிக்கம் செலுத்துமா அல்லது பார்வையாளர்களின் கருத்துகளை பொறுத்து ‘J.பேபி’ போன்ற தமிழ்படங்களின் வரவேற்பு கூடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆனால், ஓடிடியின் தாக்கத்தின் எதிரொலியாக பார்வையாளர்களின் பாராட்டு கருத்துகளோ அல்லது நட்சத்திர நடிகர்களின் படங்களோ மட்டுமே திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் என்பதை தற்போதைய திரையரங்க சூழல் உணர்த்துகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE