துபாய் வீடு முதல் கார் ரேஸ் வரை: வதந்திகளுக்கு நிவேதா பெத்துராஜ் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: துபாயில் சொந்த வீடு வாங்கினார், சென்னை கார் பந்தய தொடர்பு என தன்னைப் பற்றிய பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், அவற்றுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “சமீபகாலமாக எனக்காக பணம் செலவிடப்படுவதாக தவறான செய்திகள் பரவி வருகின்றன. இப்படியான தகவல்களை பரப்பும் சிலர் மனிதாபிமானத்துடன் இந்த தகவல்களை சரிபார்ப்பார்கள் என எண்ணி அமைதியாக இருந்தேன்.

கடந்த சில நாட்களாக பரவும் பொய்ச் செய்தியால், நானும் என் குடும்பமும் மிகப்பெரிய மன உளைச்சலில் இருக்கிறோம். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் யோசித்துப் பாருங்கள். நான் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். என்னுடைய 16 வயதிலிருந்து நான் பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் வாழ்ந்து வருகிறேன். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக துபாயில் வாடகை வீட்டில்தான் நாங்கள் வசித்து வருகிறோம்.

திரையுலகிலுமே கூட நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ, ஹீரோவிடமோ சென்று பட வாய்ப்புகளுக்காக போய் நின்றது கிடையாது. நான் இதுவரை 20 படங்களில் நடித்துள்ளேன். அவையெல்லாம் என்னை தேடி வந்த வாய்ப்புகள்தான். நான் ஒருபோதும் பணத்துக்காகவோ, வேலைக்காகவோ பேராசையுடன் இருந்தது கிடையாது. 2002 முதல் துபாயில் வாடகை வீட்டில் வசிக்கிறோம்.

2013-ம் ஆண்டிலிருந்து கார் ரேஸிங்கில் விருப்பத்தின்பேரில் நான் ஈடுபட்டு வருகிறேன். அதிலும் சென்னையில் நடக்கும் போட்டிகள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இதுதவிர என்னைப் பற்றி இதுவரையில் பேசப்படும் அவதூறுகளில் எதுவுமே உண்மையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்த பிறகு, இறுதியாக நல்ல இடத்தில் இருக்கிறேன். தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். உங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களைப் போலவே.

இதை நான் சட்டரீதியாக எடுத்துச் செல்லவில்லை. இன்னும் பத்திரிகைத் துறையில் மனிதம் மீதமிருக்கிறது என்பதை நம்புகிறேன். பத்திரிகையாளர்கள் தங்களுக்கு வரும் செய்திகளை சரிபார்த்துவிட்டு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் குடும்பத்தை மேலும் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள். எனக்காக இதுவரையில் பேசிய அனைவருக்கும் நன்றி” என்று நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE