2 மாதங்களில் 3 மலையாள படங்கள் தலா ரூ.50 கோடி வசூல் - எப்படி இருக்கிறது தமிழ் சினிமா?

By கலிலுல்லா

சென்னை: இந்த ஆண்டில் முதல் இரண்டு மாதங்களிலேயே அடுத்தடுத்து தரமான படங்களை வெளியிட்டு சம்பவங்களை நிகழ்த்தி வருகிறது மலையாள திரையுலகம். தமிழ் சினிமாவில் அப்படியொரு தாக்கம் இதுவரை நிகழவில்லை.

தமிழ் திரையுலகை எடுத்துக்கொண்டால், இந்த ஆண்டில் தொடக்கத்தில் வெளியான தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், பொங்கல் பண்டிகை விடுமுறை காலம் மற்றும் பெரிய நடிகர் பட்டாள பலத்துடன் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ இதே பாணியில் ரூ.100 கோடியை வசூலித்தது.

அடுத்து வந்த ரஜினியின் ‘லால் சலாம்’ படம் கூட ரூ.50 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை குவிக்கவில்லை. ‘ப்ளூ ஸ்டார்’ நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.50 கோடி என்ற இலக்கை நெருங்கவில்லை. மணிகண்டனின் ‘லவ்வர்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பாக்ஸ் ஆஃபீஸில் பெரிதாக சோபிக்கவில்லை. மற்ற படங்கள் எதுவும் கோலிவுட்டில் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

சொல்லப்போனால், காதலர் தினத்தையொட்டி பிப்.9-ம் தேதி தமிழில் வெளியானது ‘லவ்வர்’. அதே நாளில் மலையாளத்தில் வெளியானது ‘ப்ரேமலு’. ஆனால் ‘ப்ரேமலு’ படத்தின் வசூல் ரூ.75 கோடி. தமிழில் இரண்டு படங்கள் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளன என வைத்துக்கொண்டாலும், அதன்பிறகான எந்தப் படமும் ரூ.50 கோடி வசூலைக்கூட எட்டவில்லை என்பது கசப்பான உண்மை.

இதனை உறுதி செய்கிறது சமீபத்திய திரையரங்க ரீ-ரிலீஸ் ஆக்கிரமிப்பு. கவுதம் வாசுதேவ் மேனனின் ‘ஜோஷ்வா’, அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராமின் ‘போர்’ படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களின் காட்சிகளை விட, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்துக்கான காட்சிகள் அதிகரிகப்பட்டுள்ள அதேசமயம் பெரும்பாலான திரையரங்குகளில் சொற்ப இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

மலையாள சினிமாவை பொறுத்தவரை இந்த 2 மாதங்களில் மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ ரூ.50 கோடி, ‘பிரேமலு’ ரூ.75 கோடி, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ ரூ.50 கோடி என 3 படங்கள் ரூ.50 கோடியை வசூலித்துள்ளன. விரைவில் ‘பிரமேலு’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ ரூ.100 கோடியைத் தொடலாம். ஜெயராமின் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ ரூ.40 கோடி வசூல். டோவினோதாமஸின் ‘அன்வேஷிப்பின் கண்டேதும்’ ரூ.40 கோடி. மேற்கண்ட படங்களில் ‘பிரமயுகம்’ தவிர்த்து மற்ற படங்களின் பட்ஜெட் ரூ.10 கோடிக்கும் குறைவானது என தகவல்கள் தெரிவிகன்றன.

கன்டென்ட் வறட்சி: இந்த பாக்ஸ் ஆஃபீஸ் ஓப்பீடு படங்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது என்பதைத் தாண்டி அவை சொல்ல வருவது ஒன்று தான். அது தமிழ் சினிமாவின் கன்டென்ட் வறட்சி. திரைக்கதையின் பலவீனம். தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளியாக போகிறது என்றால், யூடியூப் சேனல்கள், முதல் கொண்டு விளம்பரப்படுத்தும் வேலைகள் மிக தீவிரமாக நடைபெறுகின்றன. உதாரணமாக ‘சிங்கப்பூர் சலூன்’.

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்துக்கொண்டிருக்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்கிற படம் வெளியாக போவது தமிழகத்தில் 90% மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் படம் மலையாளத்தை தாண்டி தமிழகத்தில் பாய்ச்சல் நிகழ்த்தி வருகிறது. ஆக விளம்பரத்தில் செலுத்தும் கவனம் படத்தின் கன்டென்டிலும், திரைக்கதையிலும் செலுத்துவதே முக்கியம் என்பதை மலையாள படங்கள் நிரூபித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றன.

அதேபோல தற்போது உச்ச நடிகர்களாக இருந்தாலும் கன்டென்ட் செறிவில்லாவிட்டால் திரையரங்கில் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை சமீபத்திய ரஜினியின் ‘லால் சலாம்’ உறுதிசெய்துள்ளது.

வாசகர் கருத்து என்ன? - திரையரங்குகளில் தனுஷின் ‘யாரடி நீ மோகினி’, விஜய்யின் ‘ஷாஜஹான்’, விஜய் சேதுபதியின் ‘96’, ஜீவாவின் ‘சிவா மனசுல சக்தி’, ’கோ’, சிம்புவின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, ஆகிய படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த ரீ-ரிலீஸ் படங்களின் ஆக்கிரமிப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து ‘இந்து தமிழ் திசை’யின் டிஜிட்டல் பக்கத்தில் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், ‘கன்டென்ட் வறட்சி’ என்ற கருத்தை 70 சதவீதம் பேர் வழிமொழிந்துள்ளனர். நாஸ்டால்ஜியா அனுபவம் என்பதை 12% சதவீதம் பேரும், 2கே கிட்ஸ்களின் ஆர்வம் என்பதை 11% பேரும் வழிமொழிந்துள்ளனர். இது தொடர்பான உங்கள் கருத்துகளை தெரிவிக்க...> ரீ-ரிலீஸ் ஆதிக்கம் ஏன்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE