காதலிக்க நேரமில்லை: மெரினாவில் உருவான எவர்கிரீன் காமெடி படத்தின் கதை!

By செய்திப்பிரிவு

சினிமாவில் மினிமம் கேரண்டி வகைக்குள் எப்போதும் பத்திரமாக இருக்கிறது காமெடி. இதில் ஹாரர் காமெடி, த்ரில்லர் காமெடி, பிளாக் காமெடி, டார்க் காமெடி என வகைகள் வரிசைகட்டி நின்றாலும் ரொமான்டிக் காமெடிக்கும் ரசிகர்கள் தனியிடம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அப்படியொரு ‘எவர்கிரீன் ரொமான்டிக் காமெடி’ படம் ‘காதலிக்க நேரமில்லை’.

இயக்குநர் ஸ்ரீதரும் அவர் நண்பர் சித்ராலயா கோபுவும் வழக்கமாக மெரினா கடற்கரையில் சந்திப்பது வழக்கம். ஒருநாள், “நாம் ஏன் காமெடி படம் பண்ணக் கூடாது?” என்று கேட்டார் கோபு. பார்வையாளர்கள் தன்னிடம் இருந்து காமெடியை எதிர்பார்க்க மாட்டார்கள் என முதலில் தயங்கினார் ஸ்ரீதர்.

பிறகு ஏற்றுக்கொண்டார். அந்தப் படம்தான், டிரெண்ட் செட்டராக மாறிய ‘காதலிக்க நேரமில்லை’. ஸ்ரீதர் இயக்கிய இந்தப் படத்தின் கதையை அவருடன் இணைந்து எழுதியது சித்ராலயா கோபு. முழு கதையும் திரைக்கதையும் மெரினா கடற்கரையில் உருவானது.

இந்தப் படம் மூலம்தான் நடிகராக அறிமுகமானார், மலேசியாவில் இருந்து வந்திருந்த ரவிச்சந்திரன். முத்துராமன், நாகேஷ், டி.எஸ்.பாலையா, ராஜஸ்ரீ, சச்சு, காஞ்சனா, வி.எஸ்.ராகவன் உட்பட பலர் நடித்தனர்.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர். ‘நெஞ்சத்தை அள்ளி’, ‘நாளாம் நாளாம்’, ‘என்ன பார்வை இந்தப் பார்வை’, ‘உங்க பொன்னான கைகள்’, ‘அனுபவம் புதுமை’, ‘மலரென்ற முகமொன்று’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘மாடிமேலே மாடி கட்டி’ உட்பட பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன.

இந்தப் படத்தில் நாகேஷின் ஓஹோ புரொடக்‌ஷன்ஸ், அவர், பாலையாவிடம் கதை சொல்லும் காமெடி, அடேடே ஹிட். அதில் நாகேஷ் கதை சொல்லும் விதமும் அதற்கு டி.எஸ்.பாலையா காட்டும் எக்ஸ்பிரஷனும் அதிகம் ரசிக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் வானொலியில் அதிகம் ஒலிபரப்பப்பட்ட காமெடி காட்சியாகவும் இது இருந்தது.

இதில் நாயகியாக நடித்த காஞ்சனா, விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியவர். அவர் இயற்பெயர் வசுந்தரா தேவி. ஏற்கெனவே வைஜயந்திமாலாவின் தாய் வசுந்தரா தேவி, அதே பெயரில் நடித்துவந்ததால் இவருக்கு காஞ்சனா என்ற பெயர் மாற்றினார், ஸ்ரீதர். அவருக்கு தாய்மொழி தெலுங்கு என்பதால் தமிழ் வசனங்களுக்காக ரொம்பவே சிரமப்பட்டார்.

இந்தப் படத்தில் நாகேஷுக்கு ஜோடியாக நடிக்க மனோரமாவைத்தான் முதலில் யோசித்தார்கள். ஸ்ரீதர், புதுசா ஒரு நடிகையை பார்க்கலாமே என்று சொல்ல, சச்சுவை முடிவு செய்தார்கள். அவர் கால்ஷீட்டை கவனித்துக் கொண்டிருந்த அவர் பாட்டி, ‘சச்சு கதாநாயகியாக நடிக்கிறார். காமெடி வேடங்கள் வேண்டாம்' என்று மறுத்தார். கோபு, ‘படத்துல 3 ஹீரோ. அதுல நாகேஷும் ஒரு ஹீரோ. உங்க பேத்தி அவருக்கு ஜோடி’ என்று சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறார்.

காஞ்சனா, ரவிச்சந்திரன், சச்சு ஆகியோருக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ திருப்பு முனையாக அமைந்தது. ரவிச்சந்திரனுக்கு முன், அந்த கேரக்டருக்காக நடந்த ஆடிஷனுக்கு நடிகர் சிவகுமாரும், தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவும் வந்திருந்தனர். சிவகுமார், பள்ளி மாணவர் போல இருந்ததால் காதல் காட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று நினைத்தார் ஸ்ரீதர். கிருஷ்ணாவுக்குத் தமிழ்ப் பிரச்சினையாக இருந்ததால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

இதில் ராஜஸ்ரீ கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமானவர் சாந்தி என்ற பரதநாட்டிய மாணவி. படப்பிடிப்பு தொடங்கி ‘அனுபவம் புதுமை’ பாடல் காட்சியை எடுக்கும்போது, ​​அவர் நடிப்பில் காதல் எக்ஸ்பிரஷன் சரியில்லை என்று கூறி நீக்கிவிட்டார் ச்ரொதர். பிறகு ராஜஸ்ரீ அந்த கேரக்டரில் நடித்தார். நீக்கப்பட்ட அந்த நடிகைக்கு ‘வெண்ணிற ஆடை’ படத்தில் வாய்ப்பு கொடுத்தார் ஸ்ரீதர். அவர்தான் ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆனார்.

டி.எஸ்.பாலையா, நாகேஷ் உட்பட அனைவரின் நடிப்பு, பாடல்கள், வசனங்கள், காட்சியமைப்பு, லொகேஷன் என அனைத்தும் பக்காவாகப் பொருந்தியது இந்தப் படத்துக்கு. ரசிகர்கள் ஒரு முறை, இரு முறையல்ல, மீண்டும் மீண்டும் பார்த்தார்கள் இந்தப் படத்தை.

மெகா வெற்றி பெற்ற இந்தப் படம், 1965-ம் ஆண்டு தெலுங்கில் ‘பிரேமிஞ்சி சூடு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் ‘பியார் கியே ஜா’ என்று ரீமேக் செய்யப்பட்டது. ஸ்ரீதர் இயக்கினார். கன்னடம், மராத்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

1964-ம் ஆண்டு இதே நாளில் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ இப்போதும் குபீர் சிரிப்பை கொண்டாட்டமாக வரவைக்கும் மாயத்தைச் செய்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்