திரை விமர்சனம்: பைரி

By செய்திப்பிரிவு

நாகர்கோவில் அருகிலுள்ள அறுகு விளையில் நூறாண்டுகளாக நடந்துவருகிறது புறா பந்தயம். அதில் ராஜலிங்கத்தின் (சையத் மஜீத்) குடும்பமும் ஒன்று. இந்தப் புறா பந்தயத்தால் வாழ்க்கை நாசமாவதாக நினைக்கும் அவரின் அம்மா சரஸ்வதி (விஜி சேகர்),லிங்கத்தைப் படிக்க வைத்து அதிலிருந்து திசைத் திருப்ப நினைக்கிறார். ஆனால், அம்மாவை ஏமாற்றிவிட்டு புறா பந்தயத்தில் மனதைச் செலுத்துகிறார் லிங்கம். இந்தப் பந்தய புறா வாழ்க்கை, அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் என்ன மாதிரியான வில்லங்கங்களை இழுத்துவருகிறது என்பதுதான் மீதி கதை.

புறா வளர்ப்பு மற்றும் அதன் பந்தயப் பின்னணியில், ரத்தமும் சதையுமான வாழ்க்கையை அசலாகக் காண்பித்திருக்கும் அறிமுக இயக்குநர் ஜான் கிளாடியை வரவேற்கலாம். அதிகம் அறிந்திராத குமரி மாவட்டத்தின் இந்தப் புதிய களமும் அடர்த்தியான காட்சிகளைக் கொண்ட திரைக்கதையும் அவருக்கு அழகாகக் கைகொடுத்திருக்கின்றன.

வில்லுப்பாட்டின் வழியே கதை சொன்ன விதமும் ‘ஏல மக்களே’ என்பதில் தொடங்கி அந்த மண்ணின் மொழியிலேயே, கதாபாத்திரங்களாக மாறிப்போன நடிகர்கள் உலவுவதும் நாகர்கோவிலின் ஏதோ ஒரு தெருவில் அமர்ந்தபடி எதிரில் நடப்பதை வேடிக்கைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது மொத்த படமும். அடுத்த பாகத்தில் என்ன நடக்குமோ என்று ஆவலைத் தூண்டியிருக்கும் இதன் கிளைமாக்ஸும் ரசனையாகவே அமைந்திருக்கிறது.

அதே போல, ‘இவ்வளவு நடந்திருக்கே.. போலீஸ்லாம் வரமாட்டாங்களா?’ என்பது உட்பட இயல்பாக எழும் கேள்விகளையும் தவிர்க்க முடியவில்லை. தொடராமல் இருக்கும் காதலுக்கு அடுத்த பாகத்தில் வேலை வைத்திருப்பார்களோ என்னவோ?

புறா பந்தயத்துக்குள் தன் நண்பனால் மெதுவாக இழுபட்டு பிறகு அதற்குள் முழுவதுமாக இறங்கிவிடுகிற துறுதுறு இளைஞன் லிங்கமாக ஆச்சரியப்படுத்துகிறார் அறிமுக நடிகர் சையத் மஜீத். ரவுடியை எதிர்க்கும் கோபக்காரனாகவும் நண்பர்களுக்கு ஏதுமென்றால் ஆவேசமாவது மாகக் கவர்கிறார். அவர் உடல்மொழியும் அதற்கு ஒத்துழைக்கிறது. ஆனால், அடிக்கடி ‘ஏய் ஏய்’ என்று கத்திதலையைச் சிலுப்புவதைத் தவிர்த்திருக்கலாம்.

நாயகனின் நண்பன் அமலாக வந்து இறுதியில் பரிதாபம் அள்ளுகிறார், இயக்குநர் ஜான் கிளாடி. இயலாமையில் மகனிடம் கத்திக்கொண்டே இருக்கும் அம்மா விஜி சேகர், உள்ளூர்க் காரர்களுக்குப் பிரச்சினை என்றால் முன் வந்து நிற்கும் பண்ணையார் ரமேஷ் ஆறுமுகம், பெரிய மீசையுடன் வில்லத்தனம் செய்யும் சுயம்பு, வினு லாரன்ஸ் உட்பட நடிகர்கள் கவனிக்க வைக்கிறார்கள். நாயகிகள் மேகனா எலன், சரண்யாவுக்கு அதிக வேலையில்லை.

அருண் ராஜின் பின்னணி இசை, கதையின் விறுவிறுப்பைக் கூட்ட உதவுகிறது. ஏரியல் வியூ ஷாட்களிலும் குறுகிய தெருக்களில் நடக்கும் சண்டைக் காட்சிகளிலும் புகுந்து விளையாடு கிறது வசந்தகுமாரின் ஒளிப்பதிவு.

எடிட்டர் ஆர்.எஸ்.சதீஷ் குமாரின் வேகமான ‘கட்’களை பாராட்டலாம் என்றாலும் தொடக்கத்தில் இழுத்துச் செல்லும் ஆரம்பக் காட்சிகள், புறா, பந்தயம், மோதல் என அதைச் சுற்றியே காட்சிகள் தொடர்ந்துகொண்டிருப்பதைக் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் ‘கிரிப்’பாக இருந்திருக்கும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE