பட்டாம்பூச்சி: தமிழில் ஹீரோவாக கமல் அறிமுகமான படம்

By செய்திப்பிரிவு

‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய கமல்ஹாசன், அப்படிேய பல படங்களில் நடித்தார். பிறகு தமிழ், மலையாளத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்த அவர், ‘கன்னியாகுமரி ’ என்ற மலையாளப் படத்தில் நாயகனாக அறிமுகமானார். தமிழில் அவர் ஹீரோவாக அறிமுகமான படம், ‘பட்டாம்பூச்சி’. இந்தப் படத்துக்கு முன் இயக்குநர் ஆர்.சி.சக்தி, ‘உணர்ச்சிகள்’ படத்தில் கமல்ஹாசனை நாயகனாக நடிக்க வைத்தார். ஆனால், அந்தப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கி தாமதமானதால், ‘பட்டாம்பூச்சி’ முந்திக் கொண்டது

படத்தில், சினிமா ஹீரோ ஆசையில் இருக்கும் கமல், ஜெயசித்ராவைக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புக்காக காதலியையே ஏமாற்றும் நிலைக்குத் தள்ளப்படுகிறார் கமல். பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும். வழக்கமான காதல் படங்களில் இருந்து வேறுபட்டு இருந்ததால் இந்தப் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஜெயசித்ரா ஓட்டல் நடத்துபவராக வருவார். அவர் தந்தை வீ.கே.ராமசாமி அந்த ஓட்டலுக்கு எதிரில் பெட்டிக் கடை வைத்திருப்பார். ஓட்டலுக்கு சாப்பிட வரும் கமலின் அறிமுகக் காட்சியில், அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதை குறிப்பிட்டு வசனம் வைத்திருந்தனர்.

பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் கமல்ஹாசனை, ‘காதல் இளவரசன்’ என்ற டைட்டிலோடு நாயகனாக அறிமுகப்படுத்தினார்கள். ஜெயசித்ராவுக்கு ‘காதல் இளவரசி’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். இருவரும் இதற்கு முன்பே சேர்ந்து நடித்திருந்தாலும் நாயகன்-நாயகியாக நடித்த முதல் படம் இதுதான். நாகேஷ், வீ.கே.ராமசாமி, மனோரமா, செந்தாமரை, ‘பக்கோடா’ காதர் உட்பட பலர் நடித்தனர். பி.சீனிவாசன் தயாரித்து, இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு கண்ணதாசனும் புலமைப்பித்தனும் பாடல்களை எழுதியிருந்தனர். ‘சர்க்கரை பந்தலில் தேன்மழை...’, ‘எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி’, ‘மதனகாமராஜனுக்கு..’, ‘பசி எடுக்கிற நேரம்’ உட்பட பாடல்கள் வரவேற்பை பெற்றன. 1975-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படம் தெலுங்கில் ‘பிரேம லீலலு’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE