“அருவருப்பாக உள்ளது... கடும் நடவடிக்கை!” - த்ரிஷா கொந்தளிப்பு @ அதிமுக முன்னாள் பிரமுகர் சர்ச்சை

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக த்ரிஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கவனம் பெற எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும் கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது. இது தொடர்பாக உரிய, கடுமையான நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும். இனிமேல் சட்டரீதியாகத்தான் எல்லாவற்றையும் சொல்லபோகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பின்னணி: சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. இவர் எடப்பாடி பழனிசாமி மீதும், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக, அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.வி.ராஜூ, கூவத்தூர் சம்பவம் குறித்து சில கருத்துகளை பகிர்ந்தார். அந்தச் சம்பவத்துடன் த்ரிஷாவை தொடர்புபடுத்தி அவர் பேசிய அவதூறு கருத்துகள் சர்ச்சை ஏற்படுத்தின. அவர் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தச் சூழலில் ஏ.வி.ராஜூவின் கருத்தையொட்டி த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் கொந்தளிப்புடன் பதிந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE