சினிமாபுரம் - 10 | பாஞ்சாலங்குறிச்சி - உப்புக்கண்ட மணமும், செம்மறி ஆட்டின் முடையும்!

By அனிகாப்பா

அன்று மகளுடன் கறிக்கடைக்குச் சென்றிருந்தேன். ஐந்தாறு பேர் ஆளுக்கொரு வேலையாகப் பிரித்துச் செய்து வாடிக்கைக்காரங்களை வேகமாக அனுப்பும் கொஞ்சம் பெரிய கறிக்கடை அது! ஊரைப் போல ஒற்றைத் தொடைச் சந்தை மொத்தமாக தொங்க விட்டு வேண்டிய அளவுக்கு வெட்டிக் கொடுப்பது போல இல்லாமல் தொடைக்கறி, இடுப்புக்கறி, நெஞ்சுச்சந்து என வகை வகையாக இரும்புக் கொக்கிகளில் அங்கு தொங்கிக் கொண்டிருந்தன. மகளுக்கு வேண்டியதை கேட்டு அதை எடைபோடச் சொல்லிவிட்டு காத்திருக்கையில் கறித்தோரணங்களுக்கு மத்தியில் கவனம் ஈர்த்தது அந்த வெள்ளைச் சவ் காகித (கேரி பேக்) பொட்டலம்.

அது என்ன என்று கடைக்காரரிடம் கேட்டபோது காயவைத்து எடுக்கப்பட்ட குடல் என்றார். "எண்ணெய்ச் சட்டியில் அப்படியே போட்டு வெங்காயம், பச்சை மிளகா கிள்ளிப்போட்டு வறுத்து சாப்பிட வேண்டும்" என்று இலவசமாக செய்முறையும் சொல்லிக் கொடுத்தார். வியாபார யுக்தி! வீட்டுக்கு வந்ததும் "ஏய்... நம்ம ஊரு கொடிக்கறிய (உப்புக்கண்டம்) இங்கே வேற மாதிரி வச்சிருக்காங்க அம்மு!" என மனைவியிடம் ஆச்சரியம் பகிர... அன்றைய விடுமுறை நாள் முழுவதும் ஊரின் கரட்டுக்காட்டு செம்மறி முடையுடனும், உப்பேறிய கொடிக்கறியின் மூக்கறையும் மணத்துடனுமே கழிந்தது.

கோயில் கொடையில் வெட்டிய முழு கிடாயை பங்காளிகளுக்கும் பகிர்ந்தது போக மீதமிருக்கும் கறியை நீளமாக துண்டம் போட்டு, கல்லுப்பு, மஞ்சள், கொஞ்சம் வத்தல் பொடி கலந்து தேய்த்து, சணல் கயிற்றில் கோர்த்து கொடியாக்கி பாட்டி காயவைத்திருப்பாள். அவளைப் போலவே இன்னும் சிலரும்.

அடுத்த ஒரு வாரத்துக்கு ஊர் முழுவதும் காற்றில் பரவிக் கிடக்கும் பச்சைக் கறியின் ஊண் உலரும் வாசம். மூக்கில் ஏறி மூளையில் அறையும் அந்த நெடியின் மூர்க்கம், கொத்துக் கட்டையில் பலம் திரட்டி வெட்டும் அளவுக்கு காய்ந்தக் கறியை கொஞ்சம் உள்ளி (சின்ன வெங்காயம்), மிளகாய் வற்றல் சேர்த்து இடித்து போட்டு, மூனு பங்கு புளித் தண்ணியை இரண்டு பங்காக வற்றுமளவு வேக வைத்து பாட்டி வைத்துத் தரும் புளிச்சாறின் சுவையில் காணாமல் போயிவிடும்.

பச்சை ஊணை... சூரிய ஒளியில் ஈரம் போக உலர வைத்து எடுத்தால் அதன் பயன்பாட்டுக் காலத்தை நீட்டிக்கலாம் என்ற ஆதிமனிதனின் அதி அற்புத கண்டுபிடிப்பு உணவைப் பக்குவப்படுத்துவதில் அவன் அடைந்த ஆகச் சிறந்த உச்சம் எனலாம். கொடிக்கறியின் வாசத்தை உணரும் நேரமெல்லாம்... நெல்லறுத்த வயல்களில் இரவடையும் கிடையும், கீதாரிகளும் நினைவை வருடுவார்கள். அன்றைய கிராமத்தின் அடையாளங்களுள் ஒன்றான கிடை மற்றும் கீதாரியை கதைப் போக்கில் தொட்டுச் சென்ற தமிழ் சினிமா சீமான் இயக்கிய ‘பாஞ்சாலங்குறிச்சி’.

பாஞ்சாலங்குறிச்சி (1996): சொந்த ஊர் கைவிட்டுவிட தன் மகன் கிட்டானுடன் பஞ்சம் பிழைக்க பாஞ்சாலங்குறிச்சி சீமைக்கு வருகிறாள் அபலை தாய் ஒருத்தி. வாழ்க்கையை எப்படியாவது வென்று விடவேண்டும் என்ற வைராக்கியத்துடன் புதிய சீமைக்குள் நுழையும் அவள் வழியில் குறுக்கிடுகிறது ஆறு ஒன்று. தன் மகனை இடுப்பிலும், தட்டுமுட்டு சாமான்களை தலையிலும் சுமந்து கொண்டு ஆற்றைக் கடக்க தயாராகிறது பேதையின் வைராக்கியம்.

தடம் தெரியாத வழியில் தட்டுத் தடுமாறி முன்னேறிய பாதங்கள் ஆற்றின் சுழிக்குள் சிக்கிக் கொள்ள மகனைக் காப்பாற்றி விட்டு ஆற்றோடு போய்விடுகிறது அந்தத் தாயின் உயிர். அநாதியாக கைவிடப்பட்ட கிட்டானை அரவணைத்ததுக் கொள்கிறது பாஞ்சாலங்குறிச்சியும் அந்த ஊர் பெரியவரான மாயாண்டித் தேவரும்.

பஞ்சம் பிழைக்க வந்தவன் மாயாண்டியின் செல்லப் பிள்ளையாய், பண்ணையாளாய் மாறிப்போகிறான். ஊர் பெரியவர் வீட்டில் வளர்ந்தாலும் கிட்டான் ஒரு கோயில் காளை. ஊர்காரர்கள் வெளியூர் செல்லும்போது வீட்டை நம்பி ஒப்படைத்துவிட்டு போகவும், தங்களின் பருவம் வந்த பெண்பிள்ளைகளை பக்கத்தூர் திருவிழாக்களுக்கு நம்பி அனுப்பவும் முதலில் தேடுவது கிட்டனையே. அந்த அளவுக்கு புடம்போட்டெடுத்த தங்கமவன்.

பாஞ்சாலங்குறிச்சியின் மற்றொரு பெரிய குடும்பத்துக்காரர் காரிச்சாமி தேவர். சில பல சட்டவிரோத செயல்கள் செய்ய மாயாண்டியால் தண்டிக்கப்பட பற்றிக் கொள்ளகிறது பகைத் தீ . மாயாண்டி, காரிச்சாமி, கிட்டான் பாத்திரங்களுடன் கதையை நகர்த்துக்கின்றனர் கிராமத்து கீதாரி அப்பு, அவரது மகள் பொட்டு கன்னி, மாயாண்டியின் மகள் சின்னாத்தா, காரிச்சாமியின் தம்பி மலைச்சாமி போன்ற கிளைப் பாத்திரங்கள். சின்னாத்தாவும் மலைச்சாமியும் பட்டணத்தில் படிக்கும் பருவச் சிட்டுகள்.

பெரியவர்களின் பகையால் ஆரம்பத்தில் மோதிக் கொள்ளும் சின்னஞ்சிறுசுகள் காலப்போக்கில் காதலுக்குள் விழுந்து, ஒன்று கலந்தும் விடுகிறார்கள். உருண்டோடும் காலம் சின்னாத்தாவை தாய்யாய் பரிணமிக்க வைக்க, உண்மையை தெரிந்துகொள்ளும் காரிச்சாமி... மாயாண்டியைப் பழிவாங்க கருவுக்கு காரணம் என கிட்டான் மீது பழி சுமத்துகிறான்.

இதனிடையே, கிட்டானின் வெள்ளந்தி தனத்தால் ஈர்க்கப்பட்ட கீதாரியின் மகள் பொட்டு கன்னி கிட்டானிடம் தன் காதலைச் சொல்ல ஊர் மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காரணம் காட்டி அவளின் காதலை தவிர்க்கிறான் கிட்டான். மாயாண்டி, காரிச்சாமி பகைக்குள் துரதிருஷ்டவசமாய் கீதாரியும் சிக்கிக் கொள்ள அவரை வெட்டிக் கொலை செய்கிறான் காரிச்சாமி. தனிமரமாகிறாள் பொட்டு கன்னி.

ஒரு கட்டத்தில் காரிச்சாமியின் வஞ்சத்துக்கு மாயாண்டியும் பழியாகி கிட்டானுக்கு எதிராக நிற்கிறார். மீண்டும் கைவிடப்படுகிறான் கிட்டான். பொட்டுகன்னி மட்டும் கடைசி வரை அவன் பக்கம் நின்று போராடுகிறாள். இறுதியில் காரிச்சாமியின் சதிகளை முறியடித்து, தன்மீதான பழியைத் துடைத்து, பொட்டு கன்னியை கிட்டான் கைப்பிடித்தானா, மாயாண்டி மனம் மாறினாரா என்பதைச் சொல்லி சுபமடைகிறது பாஞ்சாலங்குறிச்சியின் மீதிக்கதை.

கீதாரிகளும் கிராம வாழ்க்கையும்: 80, 90 காலக்கட்ட கிராமங்களின் முக்கியமான அங்கங்களில் ஒன்று கிடையும், கீதாரிகளும். சாதிகளாய் பிரிந்து கிட(க்கும்)ந்த கிராமங்களில் இடையர்களிடமே ஆடுகள் அதிகமாக இருந்தாலும், தாட்டியம் நிறைந்த வேறு சில சாதியாரும் ஆடுகள் வளர்த்தார்கள் அல்லது பண்ணைக்கு ஆடு மேய்த்தார்கள். அப்படியென்றால் கீதாரி என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியார் இல்லை. மலைகளில் இருந்து சமவெளிக்கு கால்நடைகளையோட்டி வந்த ஆதிக்குடியின் எச்சங்கள். சமவெளி நாடோடிகள். மேய்ச்சல் நிலங்களும், தண்ணீர் தடாகங்களும் கீதாரிகளுக்கும், அவர்களின் ஆட்டு மந்தைகளுக்குமான சொர்க்கம். அதேபோல இரவில் ஆடுகள் தங்க தங்கள் வயல்களில் கிடைபோட இடம் கொடுக்கும் சம்சாரிகள் உறவுக்கார்கள்.

வலசை போகும் பறவைகள், காட்டு விலங்குகளின் நினைவுகளில் ஒரு மரபு வழித்தடம் இருப்பது போல கீதாரிகளுக்கும் அவர்களால் வழிநடத்தப்படும் ஆடுகளுக்கும் வரைபடங்கள் அறிந்திராத ஒரு நினைவின் தடங்கள் உண்டு. அது பருவ காலத்தின் சுழற்சியுடன் சொந்த ஊர்விட்டு கிளம்பி தூரத்து தேசங்களுக்குச் சென்று மீண்டும் ஊர் திரும்பி கூடையும்.

இந்த நீண்ட பயணத்தில் சில ஆடுகள் விலை போயிருக்கும், சில புதிய குட்டிகள் உதயமாகியிருக்கும். விற்பனையான ஆடுகளின் விலையும் சம்சாரிகள் கொடுக்கும் கிடை பணமுமே கீதாரிகளுக்கான மிச்சம்.. பாஞ்சாலங்குறிச்சியின் கீதாரியப்புவும் இப்படியான ஒருவர்தான்.

பாஞ்சாலங்குறிச்சி கீதாரிகளின் வாழ்க்கையைச் சொல்லும் படம் இல்லை; என்றாலும் கதையின் முக்கிய முடிச்சாக கீதாரியைப் பற்றி பேசுகிறது. அவர்களுக்கும் ஆடுகளுக்குமான உறவை, மருந்து அடித்த வயலுக்குள் மேய்ச்சலுக்கு விரட்டி விடப்பட்ட ஆடுகளுக்காக கையறு நிலையில் அழும் கீதாரியின் துன்பியல் காட்சி ஒன்றின் மூலம் அழகாக காட்டிச் செல்கிறது.

ஆடுகளைப் போலவே கீதாரிகளின் மற்றொரு அங்கம் அவர்களின் மூன்றாவது கையாக இருக்கும் களைகம்பு. நீண்ட கம்பொன்றில் உள்வாங்கி வளைந்த சிறிய அரிவாள் கட்டப்பட்டிருப்பதே களைகம்பு. திசை மாறிப் போகும் ஆடுகளை மந்தைக்குள் சேர்க்கவும், அவைகளுக்கு தழை பறித்துப் போடவும் பயன்படும் அதேநேரம் ஆபத்துக் காலங்களில் கீதாரிகளுக்கான ஆயுதங்களாகவும் மாறிவிடும். இந்த நுட்பம் ஒரு மின்னல் கீற்றென இப்படத்தில் பதிவாகி இருக்கும்.

பாஞ்சாலங்குறிச்சி காட்டிய கிராமம்: அறிமுகப் பாட்டுக்கு பின்னர் கிராமத்து கீதாரியின் வீட்டில் இருந்து தொடங்குகிறது படம். அவர் வீட்டுக்கு பால் வாங்க வந்திருக்கும் பருவம் தொலைத்த பேரிளம் பெண்ணுக்கும் அவள் வயதொத்த கீதாரிக்கும் இடையில் நடக்கும் இரட்டை அர்த்த வசன சம்பாசனை அசல் கிராமத்து காதல் காவியம்.

அதேபோல கதாநாயகன் கிட்டான் கிராமத்து கீதாரியை சந்திக்க அவரது வீட்டுத்துச் செல்லும் போது அவர் வீட்டின் முற்றத்தில் அங்குமிங்கும் ஓடியபடி குளித்துக் கொண்டிருப்பார். அதற்கு "ஒரு இடத்துல நின்னு குளிக்க வேண்டியது தானே கீதாரியப்பு" என்ற கேள்விக்கு, "அட போப்பா இப்படி குளிச்சா, நாம குளிச்ச மாதிரியும் ஆச்சு, முற்றம் தெளிச்ச மாதிரியும் ஆச்சு" எனச் சொல்வார் கீதாரி.

பார்க்கவும் கேட்கவும் பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும், வீட்டுத் தண்ணீர் தெருவில் ஓடக்கூடாது என்ற அன்றைய கிராம விதியின் காட்சி பதிவு அது. அன்றைய கிராமங்களில் சாக்கடைகள் இருந்ததில்லை. மாறாக வாரி (மாரி) கால்கள் இருந்தன.

இனக்குழு வாழ்கையின் நீட்சியை கைவிடாமல் வைத்திருப்பதே கிராமங்களை அடையாளம் காண நமக்கு உதவுகின்றன. அப்படி சில நீட்சிகள் இந்தப் பாஞ்சாலங்குறிச்சியிலும் சிதறிக் கிடக்கின்றன. தன்னுடைய காதலை கிட்டானிடம் சொல்ல ஒவ்வொரு முறையும் முயற்சி செய்யும் பொட்டு கன்னி அதற்காக அவளிடம் அடிக்கடி வம்பிழுத்துக் கொண்டிருப்பாள். அப்படி ஒருநாள் வயலில் கிராமத்து பெண்களுடன் பருத்தி மாரு (பஞ்சு எடுத்து முடித்த பின் நிற்கும் காய்ந்த பருத்திச் செடிகள்) பிடுங்கிக்கொண்டிருக்கும் போது அந்த வழியாக தோளில் ஒரு தார் வாழைப்பழத்தை வைத்து தின்றபடிச் செல்லும் கிட்டானிடம் சாப்பிடும் போட்டி வைத்து வம்பிழுப்பாள். அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் அத்தனை பேரின் சாப்பாட்டையும் ஒற்றையாளாக சாப்பிட வேண்டும் என்பது போட்டி. தோற்பவர்கள் வெற்றி பெற்றவர்கள் கேட்பதைத் தரவேண்டும் என்பதே பந்தயம்... இருவரும் ஏக சந்தோஷத்துடன் ஒத்துக்கொள்வார்கள்.

ஏழு, எட்டு பேரின் சாப்பாட்டை மொத்தமாக சாப்பிட கிட்டான் அங்கிருக்கும் ஒரு வடலி பனையில் இருந்து ஒலை கிழித்து பட்டை பிடித்து சாப்பாட்டுப் பாத்திரம் தயார் செய்து கொள்வது அச்சு அசல் கிராமத்து சுவடு. பழைய சோறும் குழம்பும் தான் என்றாலும் வய(ல்)க்காட்டில் பச்சையோலைப் பட்டையில் சாப்பிடும்போது அதற்கொரு தனி ருசியே வந்து விடும். இந்த தலைமுறை அறிந்திராத அந்தச் சுவை முந்தைய தலைமுறையினரின் நா(க்கு) நரம்பில் எங்கேனும் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கலாம்.

பந்தயத்தில் ஜெயித்த கிட்டான் மாலையில் பொட்டு கன்னி வீட்டு வழியாக போகும் போது அவனை வழிமறித்து ஜெயித்ததுக்காக என்னவேண்டும் என்பாள். வீட்டிலும் தெருவிலும் யாரும் இல்லாத தைரியத்தில் அவள் வீட்டின் வெளி முற்றத்தில் நிற்பாள் முன்பு கீதாரி அப்பு குளித்த அதே முற்றம். அதன் உள்ளே செல்லும் கிட்டான் அவளிடம் பந்தையப் பொருளை கேட்க தயங்குவான். அந்த முற்றத்தில் மூலையில் துணி காயப்போடும் கொடிகயிறுடன் சேர்ந்து காய்ந்து கொண்டிருக்கும் உப்புக்கண்டத்துக்காக கயிற்றில் கோர்த்து தொங்கும் உலர் ஆட்டுக்கறி துண்டங்கள். வேட்டை காலத்து உபரி உணவினை உலர வைத்து சேமித்த இனக்குழு வாழ்க்கையின் எச்சமாக. காதலைக் கேட்க மாட்டானா என ஏங்கிய பொட்டு கன்னியிடம் கிட்டான் உப்புக்கண்டம் கேட்பது அந்த காதலை கிராமத்து பாணியில் சொல்ல நினைத்த டைரக்டர் டச்.

காலம் கலைத்துப் போட்ட சித்தாந்தம்: பாஞ்சாலங்குறிச்சி படம் அதன் இயக்குநர் சீமானுக்கு முதல் படம். உண்மையில் பாஞ்சாங்குறிச்சி ஊர் படத்தில் காட்டியது போல அத்தனை பசுமையானதா என்றால் நிஜம் வேறு மாதிரியானது. அப்படியானால், ஏன் இந்த முரண்? இந்தப் படத்தின் தலைப்பு தொடங்கி அது காட்சிப்படுத்தியிருக்கும் சமூக வாழ்க்கை வரை 90-களில் நிலவிய ஓர் ஆதிக்க அரசியலின் நெருஞ்சி முள் அடையாளம். இதை இங்கே பேசினால் கட்டுரையின் நீளம் இன்னும் கூடிவிடும். ஆனால், பேசவேண்டிய விஷயம் இயக்குநரின் முதன்மை பாத்திரம் படைக்கப்பட்ட விதம்.

தன்னுடைய ஞானத்தகப்பனுக்கு வணக்கம் தெரிவிக்கும் சீமானின் குரலுடன் தொடங்கும் படம் பிறகு ஒரு கிராமத்தின் தூரத்து விடியல் காட்சியின் பின்னணியில் தாயொருத்தி தன் மகனுடன் நடந்து வாழ வழிதேடி பயணிப்பதாய் தொடர்கிறது. பஞ்சம் திருடிய வாழ்க்கையைத் தேடி வாழப்போற ஊரின் பெருமைச் சொல்லி பாடி தன் மகனை அழைத்துச் செல்கிறாள் அந்த தாய்.அவளுடன் செல்லும் சிறுவன் கிட்டான்.

வந்தாரை வாழவைத்து பார்க்கும் தமிழ்நாட்டு கிராமங்கள் பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்காகவும் தன்னுள் நத்தம் நிலங்களை வைத்திருந்தன. அந்த அடிநாதத்தை சரடாய் பிடித்து முதல் படம் பண்ணிய சீமான் வாழ வழியற்று பிழைப்புத் தேடி வந்தவர்களை ‘பஞ்சம் பிழைக்க’ வந்தவர்களாய் காட்டியும், படத்தின் இறுதிக்காட்சியில் ஊட்டி வளர்த்தவர்களாக இருந்தாலும் தன்மானத்தை சீண்டிப்பார்க்கும் போது தட்டிவிடலாம் என்று பிழைக்க வந்தவனுக்கும் தன்மானம் உண்டென சொல்லியும் இருப்பார்.

ஆனால், இயக்குநரின் அந்த உயரிய சித்தாந்தம் பின்னாளில் அவர் அரசியல் களம் கண்டதும் அதே ‘பஞ்சம் பிழைக்க’ வந்தவர்களை வந்தேறிகள் என முழங்கியது காலம் கலைத்துப் போட்ட சித்தாந்த விளையாட்டு.

முந்தைய அத்தியாயம் > சினிமாபுரம் - 9 | தேவர் மகன்: மறக்கப்பட வேண்டிய அழகிய(ல்) வன்முறைக் கனவு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

33 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்