கேரளாவை உலுக்கிய நிஜ சம்பவம் ஒன்று 37 ஆண்டுகளுக்குப் பின் திரைப்படமாகிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் நிகழ்ந்த ‘வாச்சாத்தி’ கொடுமைக்கு நிகரான ஒன்றாக இச்சம்பவம் கருதப்படுகிறது. அது என்ன? எப்போது நடந்தது? - இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தங்கமணி: மலையாளத்தில் வெளியான ‘உடல்’ படத்தை இயக்கிய இயக்குநர் ரதீஷ் ரகுநந்தன் இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘தங்கமணி’. இப்படத்தில் திலீப் நாயகனாக நடித்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு பெரிதாக எந்தப் படமும் திலீப்புக்கு கைகொடுக்காத நிலையில், இப்படம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் ப்ரணீதா சுபாஷ், ஷைன் டாம் சாக்கோ, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், படத்தின் தலைப்பை மாற்றக் கோரிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்படம் கேரளாவின் தங்கமணி கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது.
நிஜ சம்பவம்: 37 ஆண்டுகளுக்கு முன்பு 1000 குடும்பங்கள் இருந்த ஒரு சிறிய கிராமம்தான் தங்கமணி. அதில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள். இடுக்கி மாவட்டத்தில் உள்ள இக்கிராமத்தில் சாலை, மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் அப்போது முறையாக இல்லை. மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்காக அம்மக்கள் 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கட்டப்பனாவுக்குத்தான் செல்ல வேண்டும்.
» “குற்ற உணர்ச்சியாக இருந்தது” - ‘பேட்ட’ கதாபாத்திரம் குறித்து நவாசுதீன் வருத்தம்
» சைரன் Review: விறுவிறுப்பும் வேகமும் ஜெயம் ரவிக்கு கைகொடுத்ததா?
மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் அப்போது கட்டப்பனாவுக்கும் தங்கமணிக்கும் இடையே ‘எலைட்’ என்ற தனியார் பேருந்து வசதி செய்து தரப்பட்டது. ஆனால் அந்த பேருந்து சேவை கட்டப்பனாவில் தொடங்கி பாறமடாவுடன் முடிந்துவிடும். பாறமடாவில் இருந்து தங்கமணிக்குச் செல்ல அம்மக்கள் 2 கிலோ மீட்டர் தொலைவு நடக்க வேண்டும். அதனால் கிராம மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
1986-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி வழக்கம்போல அந்தப் பேருந்து தனது சேவையை பாறமடாவில் முடித்துக்கொண்டது. ஆனால், அந்தப் பேருந்தில் இருந்த 4 மாணவர்கள் தங்கமணி வரை பேருந்தை இயக்க கோரிக்கை வைத்தனர். ஒரு கட்டத்தில் இந்த கோரிக்கை, மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது. நடத்துநரும், ஓட்டுநரும் 2 மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கிவிட்டனர்.
மற்ற 2 மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்க மறுத்ததால் அவர்கள் கட்டப்பனா காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லபட்டனர். அப்போது மாணவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மறுநாள் மாணவர்கள் கூட்டமாக திரண்டு, பேருந்தை வழிமறித்தனர். ஓட்டுநரும், நடத்துநரும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என கூறி அங்கிருந்த உள்ளூர் மக்கள் உதவியுடன் பேருந்தை சிறைபிடித்து பேருந்தை தங்கமணி கிராமத்துக்கு கொண்டு சென்றனர்.
வன்முறை வெடித்தது: 1986-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பீருமேடு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஐ.சி.தம்பான் தலைமையிலான போலீசார் இரண்டு ஜீப்பில் தங்கமணிக்கு வந்தனர். அவர்களுடன் பேருந்தின் உரிமையாளர் எலைட் தேவசியும் இருந்தார். கிராம மக்களின் பிடியில் இருந்து பேருந்தை போலீசார் விடுவிக்க முயன்றதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
ஒருகட்டத்துக்குப் பின், காவல் துறையினர் அங்கிருந்த மக்கள் மீது தடியடி நடத்தினர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனால் பலர் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். உடம்பக்கல் மேத்யூ என்பவர் காலை இழந்து மாற்றுத் திறனாளியானார். அவரைப் போல பலர் ஒரு காலை இழந்தும், கையை இழந்தும் மாற்றுத் திறனாளிகளாக வலம் வருகின்றனர். ஆனால், இச்சம்பவம் அத்துடன் முடியவில்லை என்பதுதான் சிக்கல்.
ஆப்ரேஷன் தங்கமணி: அன்றைய இரவு 11 மணி அளவில் கிராமத்துக்கு வந்த போலீசார் ‘ஆப்ரேஷன் தங்கமணி’யைத் தொடங்கினர். இந்த நடவடிக்கை அதிகாலை 3 மணி வரை நீடித்தது. இதில் காவல் துறையினர் விவரிக்க முடியாத மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்தவர்களை அடித்து, துன்புறுத்தி கிராமத்தையே சூறையாடிச்சென்றுள்ளனர்.
சட்டப்பேரவையில் எதிரொலித்தது: அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.கருணாகரன் கேரள முதல்வராக இருந்தார். எதிர்கட்சித் தலைவராக இருந்த சிபிஐ(எம்) ஈ.கே.நாயனார் உள்ளிட்டோர் ஒன்றன்பின் ஒன்றாக அரசை கடுமையாக சாடினர். 1986-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி தான் கோட்டயத்தின் பொன்குன்னம் பகுதியில் காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தி சர்ச்சையானது.
அதையடுத்து தங்கமணி விவகாரம் அப்போது கூடியிருந்த சட்டசபையில் புகைச்சலை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கெல்லாம் சளைக்காத முதல்வர் கருணாகரன் காவலர்களுக்கு ஆதரவாக, போலீஸார் பலரும் இச்சம்பவத்தில் காயமடைந்ததாகவும், எதிர்கட்சிகளை அமைதிப்படுத்த விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால், இதனை கண்துடைப்பு என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
கொடூரம்: 1986-ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி தங்கமணியில் காவல் துறையின் அட்டூழியத்தின் கொடூரமான விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இடுக்கி உடும்பஞ்சோலை தொகுதியின் அப்போதைய எம்.எல்.ஏ.வாக இருந்த எம்.ஜினதேவன் இந்தச் சம்பவம் குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
அதில் அவர், தங்கமணிக்கு வந்த 300-க்கும் மேற்பட்ட போலீசார் தாக்குதல், திருட்டு, பாலியல் உள்ளிட்ட கொடூரமான செயல்களை செய்ததாகவும், தங்கமணியில் உள்ள ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளில் புகுந்த போலீசார் பணம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திருடிச் சென்றதாகவும் தெரிவித்தார். இளம் பெண்களின் கன்னங்களை கடித்து துன்புறுத்தும் கொடூரங்களையும் காவல் துறை நிகழ்த்தியதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் இடைநீக்கம் செய்யபட்டனர். பின்னர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தக் கொடூர சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திலீப் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கமணி’ திரைப்படம் கேரளா மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அழுத்தமான கதைக்களம் கொண்ட இப்படம் திலீப்பின் திரையுலக பயணத்தில் முக்கியமான படமாக அமையும் என்பதால் அவரின் கம்பேக் படமாக இது இருக்கும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago