3 கிராமி விருதுகள் வென்ற ராப் பாடகர் கில்லர் மைக் தடுப்புக் காவலுக்குப் பின் விடுவிப்பு

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது விழாவில் 3 கிராமி விருதுகளை வென்ற பிரபல ராப் பாடகர் கில்லர் மைக் விருது பெற்ற பின் அரங்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல் துறையால் தடுப்புக் காவலில் சிறிது நேரம் வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இசைக் கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக, அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இசைத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதன், 66-வது விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இந்தியாவின் ஜாகிர் உசேன் மற்றும் சங்கர் மகாதேவனின் ஃபியூஷன் இசைக்குழுவான சக்தி இசைக்குழுவுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

சிறந்த உலகளாவிய இசை ஆல்பம் பிரிவில் விருதுகள் வென்றனர் ஜாகிர் உசேன் மற்றும் சங்கர் மகாதேவன் அடங்கிய சக்தி குழு. இவர்களின் சமீபத்திய இசை ஆல்பமான 'திஸ் மொமென்ட்' சிறந்த உலகளாவிய இசை ஆல்பம் பிரிவில் விருதைப் பெற்றது. சங்கர் மகாதேவன், ஜாகிர் உசேன் மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் கிராமி விருதை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரபல ராப் பாடகர் கில்லர் மைக்கின் ‘Scientists & Engineers’ பாடலுக்கு ‘சிறந்த ராப் பாடல்’ ‘சிறந்த ராப் பர்ஃபாமென்ஸ்’ ஆகிய இரண்டு பிரிவுகளில் 2 கிராமிய விருதுகளும், சிறந்த ராப் ஆல்பம் பிரிவில் ‘மைக்கேல்’ ஆல்பத்துக்கு ஒரு கிராமிய விருதும் என மொத்தம் 3 விருதுகள் வழங்கப்பட்டது. இவர் ராப் பாடகராக மட்டுமல்லாமல், கருப்பின மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். 2019-ம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியான ‘ட்ரிக்கர் வார்னிங்’ (trigger warnings) என்ற ஆவணப்படத்தை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், விருது பெற்ற பின் கில்லர் மைக் அரங்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் காவல் துறையால் சிறிது நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஒழுங்கீன முறையில் நடந்துகொண்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான சில மணிநேரங்களில் அவர் விடுவிக்கப்பட்ட அவர் இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE