“அனிமல் படம் குறித்து ரன்வீர் சிங் 40 நிமிடம் பேசினார்” - சந்தீப் ரெட்டி வாங்கா நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: “நடிகர் ரன்வீர் சிங் ‘அனிமல்’ படம் குறித்து 40 நிமிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார்” என படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “நடிகர் ரன்வீர் சிங்கிடமிருந்து எனக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னால் இதை நம்பவே முடியவில்லை. கிட்டதட்ட அவர் என்னிடம் 40 நிமிடங்களுக்கும் மேல் போனில் பேசினார். அதுமட்டுமல்லாமல் நீண்ட மெசேஜ் ஒன்றையும் அனுப்பினார். அதனை நான் 3, 4 முறை வாசித்திருப்பேன். அந்த மெசேஜை படித்த பிறகான என்னுடைய உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. அந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘அனிமல்’ பற்றி நிறைய விஷயங்களை எழுதியிருந்தார். அதை படித்தபின் இந்த விஷயங்களும் படத்தில் இருக்கின்றன என்பதை உணர்ந்தேன்” என்றார் நெகிழ்ச்சியாக.

முன்னதாக பாலிவுட் நடிகர் ஆமீர்கானின் முன்னாள் மனைவியும், தயாரிப்பாளருமான கிரண் ராவ்வின் ‘அனிமல்’ படம் மீதான விமர்சனம் குறித்து பதிலளித்த அவர், “இன்று காலை என்னுடைய உதவி இயக்குநர் என்னிடம் சூப்பர் ஸ்டார் ஒருவரின் முன்னாள் மனைவியின் கருத்தை என்னிடம் காட்டினார். அதில் அவர், ‘பாகுபலி 2’, ‘கபீர் சிங்’ போன்ற படங்கள் பெண் வெறுப்பு மற்றும் ஸ்டாக்கிங்கை ஊக்குவிப்பதாக தெரிவித்திருந்தார்.

அவருக்கு ஸ்டாக்கிங்குக்கும், ஒருவரை அணுகுவதற்குமான வித்தியாசம் தெரியவில்லை. சூழலை பொறுத்து தான் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். முதலில் அவர் ஆமீர்கானின் ‘தில்’ (Dil) படத்தில் உள்ள பிரச்சினையை பேசட்டும். அந்தப் படத்தில் கிட்டத்தட்ட நாயகன் நாயகியை பாலியல் வன்கொடுமை செய்யும் நிலைக்கு ஆளாக்கிவிடுவார். இறுதியில் அந்தப் பெண் நாயகன் மீது காதல் வயப்படுவார். என்ன இது?. முதலில் தன்னைச் சுற்றியிருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டாமல் மற்றவர்கள் மீது பாய்வது ஏன் என எனக்குப்புரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE