“இந்தியாவில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது” - இயக்குநர் ஜியோ பேபி

By செய்திப்பிரிவு

கொச்சி: ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘காதல் தி கோர்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜியோ பேபி. அண்மையில் அவர் அளித்த பேட்டியில் “ஒரு கட்டத்தில் நிறைய கலைஞர்கள் தங்கள் கலையின் காரணமாக சிறையில் அடைக்கப்படலாம்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியது: “இந்தியாவில் தற்போது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. மத மற்றும் அரசியல் காரணங்களால் சென்சார் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது படைப்பாளிகளை மட்டும் பாதிக்கவில்லை; கலைஞர்களையும் பாதிக்கிறது. படைப்பு சுதந்திரத்தை பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையாக உறுதியாக இருப்பது அவசியம். ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் பின்வாங்கிவிடுகிறார்கள்.

குறிப்பாக சமீபத்தில் ஓடிடியில் வெளியான நயன்தாராவின் ‘அன்னபூரணி’ திரைப்படம்.(மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது). படக்குழு இதனை எதிர்த்து எதிர்க்குரல் எழுப்பவில்லை. உண்மையில், தாங்கள் ஏதோ ஒரு குற்றத்தைச் செய்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். அது சினிமாவுக்கோ, கலைஞருக்கோ, சமுதாயத்திற்கோ நல்லதல்ல.

நான் திரைப்பட மாணவனாக இருந்தபோது, ​​2007-ல் நான் இயக்கிய ‘சீக்ரெட் மைண்ட்ஸ்’ (Secret Minds) என்ற குறும்படம் தன்பால் ஈர்ப்பாளர்கள் பற்றியது. அந்தப் படத்துக்காக ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து வெளியேற்றப்பட்டேன். 2005-ம் ஆண்டிலிருந்து நான் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து நிறைய படித்து தெரிந்துகொண்டேன். அவர்கள் சாதாரண மனிதர்கள் தான். ‘காதல் தி கோர்’ திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும், தன்பால் ஈர்ப்பாளராக மேத்யூ கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்ததற்கு பலரும் அவரை விமர்சித்தார்கள்.

LBTQ+ சமூகம் இன்னும் நம் நாட்டில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. ‘காதல் தி கோர்’ படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதை பார்க்கும்போது, ஒருநாள் அவர்கள் இச்சமூகத்தில் சாதாரணமான வாழ்க்கையை வாழலாம் என நம்புகிறேன்” என்றார்.

மேலும், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘காதல் தி கோர்’ படங்கள் குறித்து பேசிய அவர், “நம் சமூகம் இப்படியாக இயங்குவதால் தான் அவர்களும் அப்படி இருக்கிறார்கள். நம் நாட்டில் பெண்கள் இப்படியான வாழ்க்கையைத்தான் எதிர்கொண்டு வாழ்கிறார்கள். ஓமனா கதாபாத்திரம் தன்பால் ஈர்ப்பாளர் கணவருடன் சோகமான வாழ்க்கையை வாழ்கிறது. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தில் பெயரில்லாத நிமிஷா கதாபாத்திரம் மனைவி என்ற ஒற்றை அடையாளத்தால் மட்டுமே வாழ்கிறது. நம் சமூகம் சரியாக இருந்தால் நான் இந்த இரண்டு வகையான படங்களை இயக்குவதற்கான தேவையே இருந்திருக்காது. வேறு எதாவது கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியிருப்பேன்.

‘காதல் கோர்’ ஓடிடியில் வெளியான பிறகு, நாடு முழுவதிலும் இருந்து நிறைய பாராட்டுகளைப் பெற்றது. மேத்யூ, ஓமனா அல்லது தங்கன் போன்றவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைச் சொல்லி எனக்கு மின்னஞ்சல்கள் வருகின்றன. பரந்த பார்வையாளர்களை பெறுகிறோம். நமது அரசியல், சித்தாந்தம், கன்டென்ட் பல்வேறு நாடுகளை சென்றடைவதை சிறப்பான விஷயமாக பார்க்கிறேன்.

இது போன்ற படங்களை வெளியிடுவதற்கு நாம் புதிய ஸ்ட்ரீமிங் தளங்களை கண்டுபிடிக்க வேண்டும். சமூகத்தின் தற்போதை நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என நினைக்கிறேன். ஒரு கட்டத்தில் நிறைய கலைஞர்கள் தங்கள் கலையின் காரணமாக சிறையில் அடைக்கப்படலாம் என்பதால் நான் அச்சப்படுகிறேன். ஆனால் நாம் ஒன்றுபட்டு போராடினால் இதில் வெற்றி பெறுவோம் என்பது எனக்கு தெரியும். கலையின் மீது நம்பிக்கை உள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE