“நான் செய்யும் உதவிகளுக்குப் பின்னால் இருப்பது யார்?” - 5-வது ஆம்புலன்ஸை வழங்கிய பாலா விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார் பாலா. தான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று வரும் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கலக்கப் போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமானார். ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தொடர்ந்து இவர் எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். தனது சொந்த செலவில் இலவச ஆம்புலன்ஸ்களையும் வழங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்த 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார். பாலாவின் இந்த செயல்களை தொடர்ந்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார் பாலா. இந்த கிராமத்தில் சுமார் 172 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பாலா, “இந்த கிராமத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஒரு கர்ப்பிணி பெண்ணை கயிறு கட்டி கீழே இறக்கியதாக ஒரு செய்தி பார்த்தேன். இங்கு வந்து பார்த்தபிறகு தான் தெரிந்தது, அப்படி கயிறு கட்டி இறக்கும்போது நிறைய பெண்களுக்கு பாதிவழியிலேயே பிரசவம் ஆகிவிடுறது என்று. இந்த கிராமத்துக்கு ஏறிவருவதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனவே இந்த ஐந்தாவது ஆம்புலன்ஸை இந்த கிராமத்துக்கு வழங்கியுள்ளேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தருபவர்களுக்கு மிக்க நன்றி.

உங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள். நான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆமாம், இருக்கிறார்கள் தான். அது அவமானம், கஷ்டம் ஆகியவை. இவையெல்லாம் என் பின்னால் இருந்ததால்தான் நான் இந்த உதவிகளை செய்து வருகிறேன். “எதிர்காலத்தில் நீ சிக்னல்ல பிச்சை எடுப்பாய். அப்போது கூட நான் உனக்கு பிச்சை போடாமல்தான் போவேன்” என்று சிலர் கமெண்ட் செய்கிறார்கள். நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறேனோ அதே சிக்னலில் நான் கொடுத்த ஆம்புலன்ஸும் வரும். எனவே எனக்கு அது ஒரு பிரச்சினை இல்லை” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE